புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சனாதன கல்விக்கொள்கை எதிர்ப்பு மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், கோயில் சிலைகள் குறித்து விமர்சித்து பேசியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
திருமாவளவனின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு இந்து அமைப்புகளும் தொடர்ந்து கண்டனக் குரல் எழுப்பி வருகின்றன. இதனால் அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் இந்து அமைப்புகள் அளித்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே திருமாவளவனுக்கு ஆதரவாக இயக்குநர் பா. ரஞ்சித் கருத்து தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், 'ஒரு கருத்தையொற்றி எதிர் வைக்கப்படும் விமர்சனம் விவாதத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால், இங்கு விமர்சனங்களாக வசைகள், தனிமனிதத் தாக்குதல்கள் மற்றும் அவதூறு நிகழ்த்தப்படுவது இவர்களுக்கு பண்பாடாகவே இருக்கிறது. அண்ணன் #திருமா அவர்களை தரம் தாழ்த்தும் பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறப்போவதில்லை!' என்று குறிப்பிட்டுள்ளார்.