ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ஆங்காங்கே சாதிய வன்கொடுமைத் தாக்குதல் நடைபெற்று வருவதாக இயக்குநர் பா. ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'உலகெங்கிலும் கரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று பற்றிய கேலிப்பேச்சுகளைப் பரப்பி கிண்டலடித்துக் கொண்டிருந்தோம்.
பல்வேறு இடர்பாடுகளை தாங்கி, நாம் அனைவருமே கரோனாவிற்கு எதிராக ஒருங்கிணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த நோய்த்தொற்றினால், நாம் இறந்து விடுவோமோ என்கிற அச்சத்தை போக்குவதற்காக நமக்கு, "நோயுடனே வாழ பழகிக்கொள்வோம்" என்று அரசு தரப்பு இப்போது நழுவுவதையும் காண முடிகிறது. இந்த கரோனா பேரிடரால் உலகமும், இந்தியாவும் என்னவெல்லாம் மாற்றங்களை சந்திக்கப் போகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் முதல் சாமானிய மக்கள் வரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான குற்ற நடவடிக்கைகள் குறைந்திருப்பதும், மனிதநேயதன்மையின் பொருட்டு சக மனிதனுக்கான உதவிகள் பெருகியதும் பாராட்டுக்குரியவைகள்.
ஆனால், வழக்கம்போல நம் தமிழ்நாட்டில் கரோனாவை விட கொடிய நோயான சாதிவெறி, அதே உயிர்ப்புடன் தன் கோர தாண்டவத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது. இந்த கரோனா காலத்தில் நமக்குத் தெரிந்து, தமிழ்நாட்டில் மட்டும் கிட்டதட்ட முப்பதுக்கும் மேற்பட்ட பல்வேறுவிதமான சாதி வன்கொடுமை தாக்குதல்கள் பட்டியலின மக்களின் மேல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இச்சம்பவங்கள் யாவும், எத்தனைப் பேரிடர் வந்தாலும் இந்த மனிதர்கள் மனதில் தேக்கி வைத்திருக்கிற சாதிவெறி வன்மத்தை மட்டும் விட்டொழிக்கமாட்டார்கள் என்ற வலி தரும் உண்மையை மிக தீர்க்கமாக உணர்ந்து கொள்ள வைக்கிறது.
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் டி. கோணாகாபாடி ஊராட்சி மன்றத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அம்சவள்ளியை சாதியின் பெயரால், பணி செய்யவிடாமல் தடுத்து, அவர் மீது சாதிய வன்மத்தைக் காட்டிய சாதிவெறிக்கும்பல் தொடங்கி நேற்று முன் தினம் இரவு தூத்துக்குடி அருகே நிகழ்த்தப்பட்ட இரட்டைக்கொலை வரை நம் தமிழ் மக்கள் சாதிவன்மம் முற்றிப்போய் சக மனிதனாகிய, சகோதரனாகியவர்கள் மீது எவ்வித அச்சமுமின்றி சாதி வன்கொடுமைகளை இந்த நெருக்கடியான காலத்திலும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
உலகமே துவண்டு கிடக்கக்கூடிய, இப்படியான நெருக்கடி காலத்திலும் கூட, அன்றாடம் தாக்குதலை எதிர்கொண்டிருக்கிற ஒவ்வொரு பட்டியலின மக்களுக்கும் பின்னால் இருக்கிற வலியையும், வேதனையையும் இப்போதாவது நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார், பா.ரஞ்சித்.
இதையும் படிங்க:மாற்றுத்திறனாளிக்கு வாய்ப்பு அளிக்கும் விஜய்!