'மூடர் கூடம்' நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - அருண் விஜய் ஆகியோர் இணைந்து நடித்துவரும் திரைப்படம் 'அக்னிச் சிறகுகள்'. அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இப்படத்தில் அக்ஷரா ஹாசன், பிரகாஷ் ராஜ், நாசர், தலைவாசல் விஜய், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே மற்றும் சென்றாயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் பணிபுரியும் நடிகர் நடிகைகளின் கதாபாத்திரம், லுக் போஸ்டர்களை படக்குழு கடந்த மாதம் வெளியிட்டிருந்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கஜகஸ்தான், ஐரோப்பா நாடுகளில் முதல்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றுள்ள நிலையில், இறுதிக் கட்ட படப்பிடிப்பு பணிகள் ரஷ்யாவில் விறுவிறுப்பாக நடைபெற்றது. ரஷ்யாவில் நிலவிய கடும் குளிருக்கு மத்தியில் அருண் விஜய்யும், விஜய் ஆண்டனியும் அதிரடி சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன.
தற்போது கரோனா அச்சுறுத்தலால் அவதிக்கு உள்ளாகியுள்ள தயாரிப்பாளர்களை கவனத்தில் கொண்ட முதல் நபராக விஜய் ஆண்டனி தனது சம்பளத்தில் இருந்து 25 விழுக்காடு குறைத்துக்கொள்வதாக அறிவித்திருந்தார்.
இதனிடையே 'அக்னிச் சிறகுகள்' படத்தின் இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஸ்விட்சர்லாந்தில் மாட்டுத் தொழுவத்தில் அமர்ந்து மேக்கப் போட்டுக்கொள்ளும் மகத்தான மனிதர் தன் சம்பளத்தில் 25% குறைத்துக் கொள்வதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. சென்னையில் காரில் ஏசி போட்டுக் கொள்ளாதவர் ரஷ்யாவின் -20 டிகிரி குளிரை எங்களுக்காக தாங்கி நடித்ததுதான் பெரியவிஷயம்" என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் செய்திருப்பது உங்கள் கடின உழைப்புக்கு முன்னால் ஒன்றுமில்லை. உங்கள் அர்ப்பணிப்பு பணியில் பங்கேற்பது எனக்கு சந்தோசம்" என குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: 'அக்னி சிறகுகள்'அருண்விஜய் மிருகத்தைப் போல் சண்டையிடுவார் - இயக்குநர் நவீன்