சென்னை: தி கொயட் பிளேஸ் ஹாரர் படம் 2018 ஆம் ஆண்டு வெளியானது. பூமிக்கு வரும் வேற்றுக்கிரக வாசிகள், ஒரு ஊரை காலி செய்ய முடிவு செய்கின்றனர். அதில் ஒரு குடும்பம் மட்டும் சத்தம்போடாமல் வாழ்ந்துவருகிறது.
சத்தம் போட்டால் அழிக்கத் திட்டமிடும் எலியன்களிடமிருந்து, அந்தக் குடும்பம் எப்படித் தப்பிக்கிறது என்பதே படத்தின் கதையாகும். முதல் பாகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படம் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் தி கொயட் பிளேஸ் 2 படத்தை இயக்குநர் மிஷ்கின் பிசாசு 2 படக்குழுவினருடன் சென்று பார்த்துள்ளார். இது குறித்து மிஷ்கின் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று இரவு ஆங்கிலத் திரைப்படம் தி கொயட் பிளேஸ் 2 ஆவது படத்தை எனது பிசாசு -2 குழுவினருடன் பார்த்து வியந்தேன். இரண்டு வருடத்திற்கு முன்பு இந்தத் திரைப்படத்தின் முதல் பாகத்தைப் பார்த்து வியந்திருந்தேன். இரண்டாவது பாகம் வருகிறது என்று அறிவித்த பொழுது முதல் பாகம் அளவிற்குச் சுவாரஸ்யமாக இருக்காது என நினைத்தேன்.
ஆனால் இன்று பார்த்தவுடன் எனது கணிப்பு தவறானது என உணர்ந்தேன். தி கொயட் பிளேஸ் 2 நூறு சதவீதம் சுவாரஸ்யமாய் இருந்தது. என்னோடு படம் பார்த்த அனைவரும் இருக்கையின் நுனியிலிருந்து பதற்றத்துடன் பார்த்து ரசித்தனர். திரைப்படத்தின் இயக்குநரும், எழுத்தாளருமான ஜான் கிரஸ்ன்ஸ்கி இந்த பத்து வருடத்தில் ஹாலிவுட் சினிமா கண்டு பிடித்த திறமையான படைப்பாளி.