இயக்குநர் மகேந்திரன் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு திரை உலகை சேர்ந்த நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன்,
'இயக்குநர் மகேந்திரன் எனக்கும் நெருங்கிய நண்பர். தங்கப்பதக்கம் படத்தில் பணியாற்றியதில் இருந்தே அவரை எனக்கும் தெரியும். பரமக்குடி ஊருக்கு அருகில்தான் அவரது ஊர், திறமையான மனிதர். அவர் இயக்கிய படங்கள் குறைவாக இருந்தாலும் எங்களது நட்பு நெடு நீண்ட பயணமாக இருந்துள்ளது.
முள்ளும் மலரும் படத்தில் நான்தான் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் நடிக்க முடியவில்லை. தமிழ் சினிமா பக்கமே வரமாட்டேன் என்று கூறிய பாலுமகேந்திராவை, முள்ளும் மலரும் படத்தில் மகேந்திரனுடன் சேர்ந்து பயணிக்க வைத்தது மறக்க முடியாத பசுமையான நினைவாக இருக்கிறது. மகேந்திரனை பார்த்துதான்சினிமா எடுக்க வேண்டும் என எண்ணி ஒரு இளைஞர் பட்டாளமே தமிழ் சினிமா பக்கம் வந்தது. அது அவருக்கு கிடைத்த பெருமை.
முள்ளும் மலரும் படத்தில் புரொடக்ஷன் மேனேஜராக நான் பணியாற்றினேன்.இருவரும் சேர்ந்து இந்த படத்தை வெளியிட்டோம். மகேந்திரன் அவரது கலைப்பணியை தொடர்ந்திருக்கலாம் என்ற வருத்தம் சிறிதளவு இருக்கிறது. அவர் விட்டு சென்ற பாதையை தமிழ் சினிமா தாங்கி நிற்கும்' எனக் கூறினார். அப்போது, கமல்ஹாசனுடன் தமிழக வாழ்வுரிமை கட்சியின்தலைவர் வேல்முருகனும் மகேந்திரனின் உடலுக்குஅஞ்சலி செலுத்தினார்.