தஞ்சைப் பெரிய கோயிலின் குடமுழுக்கு விழாவுக்காக சென்னையில் இருந்து சென்ற தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும் திரைப்பட இயக்குநருமான வ.கவுதமனை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர், அவரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென மேலிடத்தில் இருந்து உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, அவரை அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கொண்டு செல்ல முற்பட்டனர்.
இங்கேயே விசாரணையை மேற்கொள்ளலாமே என்று இயக்குநர் கவுதமன் கூற, அதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்வதாக அறிவித்தனர்.
அப்போது ஊடகங்களை சந்தித்த இயக்குநர் கவுதமன், ' உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை மீறி, தஞ்சையில் நடைபெறும் குடமுழுக்கு விழாவில் தமிழ் மரபுகளை மறைத்து குடமுழுக்கை நடத்தும் இந்து அறநிலைத் துறையை கண்டித்தும் தமிழில் குடமுழுக்கு செய்ய வலியுறுத்தியும், மக்கள் மத்தியில் அதற்கு ஆதரவு திரட்ட நான் கிளம்பியிருப்பதாக உளவுத் துறை தகவல் கிடைத்திருக்கிறதாம். அதனால், நான் தஞ்சை பெரிய கோயில் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னை கைது செய்வதாக கூறுகிறார்கள்.