தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று (ஏப்ரல் 6) நடைபெற்ற நிலையில், இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் வாக்களிக்கவில்லை. தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனக் கூறி சமூக வலைதளப்பக்கத்தில் தேர்தலுக்கு முந்தைய நாள் வரை ட்வீட் செய்து வலியுறுத்திவந்தார்.
ஆனால் அவரே தேர்தலில் வாக்களிக்காததால் அது குறித்த விளக்கத்தை தற்போது தனது சமூக வலைதளப் பக்கமான ட்விட்டரில் அளித்துள்ளார்.
அதில், "வணக்கமும் நன்றியும்... ஜனநாயகக் கடமையைச் சீராகச் செய்த சிறப்பானவர்களுக்கு! வருத்தமும், இயலாமையும்....இரண்டாம் தவனை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் தடித்து வீங்கிவிட்டது.டாக்டருக்குக் கூட போட்டோ எடுத்தனுப்பியே மருத்துவம் செய்துக் கொண்டேன். மாலை வரை சற்றும் குறையவில்லை!
எனவே தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற reactions. அதுவும் எனக்கு ஏற்கனவே allergy issues இருந்ததால் மட்டுமே trigger ஆனது. என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில்" என்று பதிவிட்டுள்ளார். பார்த்திபன் விரைவில் குணமடைய பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறிவருகின்றனர்.