சென்னை: விஜய் சேதுபதி சமீபத்தில் பதிவிட்ட ட்வீட்டை தலைப்பு வைப்பதற்கு ஏதுவாக பதிவு செய்யுமாறு தனது முந்தைய படத்தின் தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்துள்ளார் இயக்குநர் சி.எஸ். அமுதன்.
விஜய் சேதுபதி கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டதாக வதந்தி பரவிய நிலையில், அதற்கு ஆதரமாக விஜய் வீட்டில் நடந்த வருமானவரித்துறை சோதனையின் பின்னணி என இணைத்து நீண்ட தகவல் ஒன்று பரவியது.
இதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி தனது ட்விட்டரில், 'போயி வேற வேலை இருந்தா பாருங்கடா' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து தமிழில் வெளியான நய்யாண்டி படமான தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 படங்களை இயக்கிய இயக்குநர் சி.எஸ்.அமுதன், 'போயி வேற வேலை இருந்தா பாருங்கடா' என்ற தலைப்பை தயவு செய்து பதிவு செய்யுமாறு தயாரிப்பாளர் சசிகாந்திடம் ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.
இயக்குநர் சி.எஸ். அமுதனின் 'தமிழ்ப்படம்' சீரிஸை தனது ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரித்திருந்தார்.
அரசியல், சினிமா என அனைத்திலும் நடக்கும் நிகழ்வுகளை கேலி செய்யும் விதமாக கருத்துகளை பதிவிட்டு வருகிறார் சி.எஸ். அமுதன். இவரது அடுத்த படம் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
இதையடுத்து விஜய் சேதுபதி ட்வீட்டை சி.எஸ். அமுதனின் கோரிக்கை படி பதிவு செய்யும்பட்சத்தில், அவரிடம் அடுத்த படத்துக்கான கதை ரெடியோ இல்லையோ, அருமையான டைட்டில் கிடைத்திருக்கிறது என்று கூறலாம்.
முன்னதாக, 'தமிழ்ப்படம்' வெற்றிக்குப் பின் ரிச்சர்டு, விமல், விஜயலட்சுமி, ரம்யா நம்பீசன், சஞ்சனா சிங் என பலர் நடிக்க 'ரெண்டாவது படம்' என்ற படத்தை இயக்கினார். 2012ஆம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இந்தப் படம் இதுவரை ரிலீஸாகாமல் முடங்கியுள்ளது.
தமிழில் ரிலீஸாகாமல் பெட்டிக்குள் இருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.