சென்னை:நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக், சேரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஆனந்தம் விளையாடும் வீடு. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சேரன் திரைத்துறைக்கு வந்து இதுவரை 35 படங்களில் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், "அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.. நினைத்து திரும்பி பார்க்கையில் பிரமிப்பாகத்தான் இருக்கிறது. 34 படங்களை கடந்து 35ஆவது படத்தில் பணிபுரிகிறேன். இயக்குநராய், நடிகராய், தயாரிப்பாளராய்.. பன்முக அடையாளங்களுடன் நான் கடந்த இந்த தூரங்களும் அதில் நான் உருவாக்கிய, நடித்த, தயாரித்த இந்த படங்களும் இன்று என்னை மகிழ்விலும் பிரமிப்பிலும் ஆழ்த்துகிறது.
அதற்கு காரணம் நீங்கள் அதாவது நல்ல திரைப்பட ரசிகர்களாய் இருக்கும் நீங்கள் தரும் தொடர் ஆதரவுதான். அதற்கு என் நன்றியை மனதார இங்கேப் பதிவு செய்கிறேன். நல்ல திரைப்படங்களை என் மக்களின் வாழ்விற்கான திரைப்படங்களை நான் உருவாக்கும்போதெல்லாம் என்னை கரம் கொடுத்து ஊக்குவித்து கைதட்டி வரவேற்று எனக்கு பாதை உருவாக்கி கொடுத்தவர்கள் நீங்கள்.