தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ராஜவுக்கு செக் படத்தை பெண் குழந்தைகளுடன் வந்து பாருங்கள் - இயக்குநர் சேரன் - ராஜவுக்கு செக் ட்ரெய்லர்

நாம் எந்த தருணத்தில் அப்பாவாக உணர்கிறோம் என்பதை அழகாக சொல்கிறது ராஜவுக்கு செக் திரைப்படம். சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அப்பாவாக வாழ வேண்டி கிடைத்த வாய்ப்பை நேர்மையாக பயன்படுத்தினேன் என்று இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.

ராஜவுக்கு செக் பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் சேரன்

By

Published : Oct 16, 2019, 12:15 AM IST

Updated : Oct 16, 2019, 4:32 AM IST

பல்லாட் கொக்காட் ஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘ராஜாவுக்கு செக். மழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் சேரன் கதாநாயகனாக நடித்துள்ளார்

சிருஷ்டி டாங்கே, சரயூ மோகன், நந்தனா வர்மா, விஜய் டிவி புகழ் இர்பான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தெலுங்கில் முன்னூறுக்கும் அதிகமான படங்களில் பணியாற்றி, பின்னணி இசைக்காகவே பிரபலமான வினோத் யஜமானியா இப்படம் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இதையடுத்து படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீடு சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக, இயக்குநர்கள் வசந்தபாலன், சரண், பத்மா மகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நடிகை சிருஷ்டி டாங்கே பேசுகையில்,

எப்போதுமே ஒரு படத்தில் கதைதான் ராஜா. இந்தப் படமும் அப்படித்தான். அதுதான் நான் நடிப்பதற்கும் காரணமாக அமைந்தது. இன்றைய தேதியில் பெண்கள் தங்கள் வாழ்க்கை குறித்து, சுதந்திரம் குறித்து எப்படி உணர்கிறார்கள் என்பதை பிரதிபலிக்கும் விதமாக எனது கதாபாத்திரம் அமைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்தப் படத்தில் நான் நடித்துள்ள ஒரு சவாலான காட்சியை இதுவரை தமிழ் சினிமாவில் ஒரே ஒருவரைத் தவிர யாருமே நடித்ததில்லை என்று உறுதியாக சொல்வேன்.

இயக்குநர் சேரன் ப்போதும் இப்போதும் என்னை ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருக்கும் ஒரு நபர். அவருடன் நடித்தது எனது அதிர்ஷ்டம். படத்தின் வில்லன் இர்பான் செய்த விஷயத்தால், நான்கு நாட்கள் நான் மருத்துவமனையில் இருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது என்றார்.

இயக்குநர் சேரன் பேசுகையில்,

இந்தப் படத்தில் நடித்த என்னை விட மற்ற அனைவரும் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். காரணம் நான் தேவையான அளவுக்கு வெற்றி, பெயர் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். ஆனால் பாராட்டுக்களை எதிர்நோக்கி அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர் கூட்டம்தான் இங்கே இந்த படத்தில் வெற்றியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

குடும்பத்துக்கான திரில்லர் படமாக இது அமைந்துள்ளது.. உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருந்தால் இந்தப் படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும். அவர்களையும் அழைத்து வந்து படத்தை காட்ட வேண்டும். அது அவர்களுக்கு ஒரு பத்து புத்தகங்களை கொடுத்து படிக்கச் சொன்னதற்கு சமமாக இருக்கும்.

தற்போதைய வாழ்க்கை சூழலில், இன்றுள்ள சமூகத்தில் எந்த மாதிரியான வாழ்க்கையில் நாம் இருக்கிறோம், நமக்கான அபாயங்களும் நமக்கான பிரச்னைகளும் நம் கூடவே வந்து கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட சூழலில் பெண் குழந்தைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கிறது. அப்படி ஒரு பெற்றோராக, அவர்களின் பிரதிநிதியாகதான் நானும் இருக்கிறேன்.

நாம் எந்த தருணத்தில் அப்பாவாக உணர்கிறோம் என்பதை இந்தப் படம் அழகாக சொல்கிறது. நான் பல தருணங்களில் என்னை ஒரு அப்பாவாக உணர்ந்திருக்கிறேன்.

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது கூட அங்கே ஒரு அப்பாவாக வாழ வேண்டிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதிலும் நான் என்னுடைய மகளை பார்ப்பதுபோல உண்மையாக, நேர்மையாக அவரைப் பார்த்துக்கொண்டேன். அதில் எந்த பாசாங்கும் இல்லை. அந்த விளையாட்டுக்காக அப்படி நடக்கவேண்டிய எண்ணமும் ஏற்படவில்லை. அந்தப் பாசத்தை நான் பொய்யாக காட்டினால், இந்த உலகத்தில் வாழ்வதற்கே எனக்கு அருகதை கிடையாது.

படம் பார்க்கும் பார்வையாளர்கள் இந்தப் படத்தின் கதாபாத்திரத்துடன் தங்களை ஏதோ ஒரு விதத்தில் தொடர்புபடுத்திக் கொள்வது போல இந்தப் படம் இருக்கும். படம் பார்த்து முடித்துவிட்டு நீங்கள் வெளியே வரும்போது யாரோ ஒருவருடைய கரத்தைப் பற்றிக்கொள்ள தேடுவீர்கள். அது உங்களுடைய மகளுடைய, மகனுடைய, மனைவியுடைய, யாரோ ஒருவருடைய கரமாக இருக்கலாம்..

உறவுகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. உங்கள் உறவுகளிடம் இருந்தும் அவர்கள் ஏற்படுத்தும் தொல்லைகள், பிரச்னைகளிலிருந்தும் அவை கொடுக்கும் அனுபவங்களிலிருந்தும் தயவுசெய்து விலகி நின்று விடாதீர்கள். அவற்றின் கூடவே சேர்ந்து பயணியுங்கள்.

இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு சற்று கஷ்டமாகவும், அதேசமயம் சவாலாகவும் இருந்தது. படத்தின் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு இன்னொரு இணை இயக்குநர் போலவே பணியாற்றியுள்ளார்.

படத்துக்காக திரையரங்கு உரிமையாளர்கள் நிறைய தியேட்டர்கள் கொடுக்கவேண்டும்.. அதிக காட்சிகள், குறிப்பாக குடும்பத்துடன் அனைவரும் வந்து பார்க்கும் விதமாக மாலை நேர காட்சிகளை ஒதுக்கவேண்டும்.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது எனக்கு ஆதரவாக வெளியில் இருந்து பேசியவர்களில் இங்கே வந்திருக்கும் இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்த கருத்துக்கள் அங்கே உள்ளே இருக்கும்போதே என் காதுகளுக்கு வந்தது. வெளியே வந்த பிறகும் அதை நான் பார்த்தேன். என்மேல் கொண்ட அன்பின் மிகுதியால் மட்டுமே அவர் அப்படி பேசியிருக்கிறாரே தவிர, அதில் வேறு ஒன்றுமில்லை. அக்கறை உள்ளவர்கள்தான் நம் பக்கத்தில் வந்து நிற்பார்கள். மற்றவர்கள் பார்த்து சிரித்துவிட்டு போய்விடுவார்கள.

தமிழ் சினிமாவில் புதுப்புது படைப்பாளிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். சமீபத்தில் அசுரன் படத்தை பார்த்து பிரமித்துப் போய்விட்டேன். எப்படி அந்தப் படத்தை அருமையாக படைப்பாக்கம் செய்திருக்கிறார்கள். கமர்சியல் படங்களில் நடித்து வரும் ஒரு நடிகன் எப்படி 50 வயது மனிதனாக தன்னை மாற்றிக்கொண்டு அற்புதமாக நடிக்க முடிகிறது. அதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும். அந்த மாதிரியான படங்களை தருவதற்கு இங்கே நிறைய படைப்பாளிகள் இருக்கிறார்கள். ஆனால் இங்கே படங்களை வியாபாரம் செய்வதில் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம்..

சமீபத்தில் ஒத்த செருப்பு படம் வெளியானது. பார்த்திபன் அருமையான படைப்பாளி. அதுபோன்ற படம் வெகு ஜனங்களை சென்றடைய வேண்டுமே என்கிற ஏக்கம் அவரைப்போல பலருக்கும் இருக்கிறது. அது போன்றதொரு திரைப்படம்தான் இந்த ராஜாவுக்கு செக் படமும் என்றார்.

இயக்குனர் சாய் ராஜ்குமார் பேசுகையில்,

வெயில் பட இயக்குநர் வசந்த், சரண் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளேன். இந்தப் படம் எனக்கு கிடைப்பதற்கு காரணம் அம்முவாகிய நான் படத்தை இயக்கிய டைரக்டர் பத்மா மகன்தான். அவருக்கு வந்த ஒரு வாய்ப்பைதான் எனக்கு திருப்பிவிட்டு, இன்று என்னை இந்த மேடையில் நிற்கும் அளவுக்கு கொண்டுவந்துள்ளார்.

இத்தனை வருடங்கள் கழித்து படம் இயக்க வந்தாலும் அதுபற்றி எதுவும் கேட்காமல் நான் சொன்ன கதையை ரசித்து இந்தப்படம் இயக்கும் வாய்ப்பை தந்த தயாரிப்பாளர்களுக்கு ரொம்ப நன்றி.

வேறு எதிலும் குறுக்கிடாமல், அவர்களுடைய எல்லா முடிவுகளையும் சேர்த்து நானே எடுக்கும் சுதந்திரத்தையும் எனக்கு கொடுத்தார்கள்.

இந்த கதாபாத்திரத்தை உருவாக்கிய பின்பு, இதில் எங்கள் வசதிகளுக்கு உட்பட்டு என் மனதில் தோன்றிய முதல் நபர் சேரன்தான். ஆனாலும் முதல் முயற்சியிலேயே அது செட்டாகவில்லை. இருந்தாலும் நான் பிடிவாதமாக சேரன்தான் நடிக்க வேண்டும் என்கிற முடிவில் இருந்தேன்.

காரணம் அப்பா என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதாலும், அவரை எளிதாக ஒரு அப்பாவாக ரசிகர்கள் பொருத்திப் பார்த்துக் கொள்வார்கள் என்பதாலும்தான் இந்தக் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க வேண்டும் என உறுதியாக இருந்தேன்.

என் நல்ல நேரமோ என்னவோ தெரியவில்லை, சேரன் இப்போது உலகமறிந்த சேரப்பாவாக மாறிவிட்டார். அதன்பிறகு அவர் மீதான கண்ணோட்டமே மாறிவிட்டது.

அப்பா பொண்ணு கதைக்கு சேரன்தான் சரி என நாங்கள் செய்த முடிவு தீர்க்கதரிசனமாக மாறிவிட்டது. ஆனால் இந்தப் படத்தை ஆரம்பித்த போது இதில் சேரன் எப்படி செட் ஆவார் என்று கூட சிலர் கேட்டார்கள். ஆனால் பாட்ஷா படத்தில் எப்படி ரஜினியை தவிர்த்துவிட்டு வேறு யாரையுமே அந்த இடத்தில் பொருத்திப் பார்க்க முடியாதோ, அதேபோல இந்தப் படம் வெளியான பிறகு இந்தக் கதாபாத்திரத்தில் சேரனை தவிர்த்து வேறு யார் நடித்திருந்தாலும் அவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது என்று நீங்களே உணர்வீர்கள்.

படத்தில் நடிப்பதற்கு தயங்கிய இர்பானையும் சமாதானப்படுத்தி நடிக்க வைத்தேன். இப்போது நீங்கள் மேடையில் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிற இர்பானை இந்தப் படம் வெளியான பிறகு வெளியே பார்த்தால் தெறித்து ஓடும் அளவுக்கு படத்தில் இடம்பெறும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நாயகி சிருஷ்டி டாங்கே நடித்திருப்பது மிகவும் துணிச்சலான கதாபாத்திரம்..படத்தில் அவர் நடித்த ஒரு காட்சியை இதுவரை நீங்கள் வேறு எந்த சினிமாவிலும் பார்த்திருக்க முடியாது..

சினிமாவுக்காக எந்த வித சீட்டிங்கும் அந்தக் காட்சியில் கிடையாது. படத்தின் இசையமைப்பாளர் வினோத் யஜமான்யாவை நான் மிக்ஸிங் பணியின்போதுதான் முதன் முறையாக நேரில் பார்த்தேன். பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் என்றார்.

Last Updated : Oct 16, 2019, 4:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details