'பிக்பாஸ்' நிகழ்ச்சி சீசன்-3இல் முக்கியப் போட்டியாளராக இருந்தவர் இயக்குநர் சேரன். திரைப்படங்களில் அவர் நல்ல கருத்துகளை சொல்லிவந்தது போலவே பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் போட்டியாளர்களுக்கு ஒழுக்க நடவடிக்கைகளை சொல்லிவந்தார்.
மற்ற போட்டியாளர்கள் சிலர் ஆரம்பத்தில் அவரை எதிர்த்தாலும் பின்னாளில் அவரை மெள்ள மெள்ள புரிந்துகொண்டனர். அவருக்கு வெளியிலிருந்தும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
சகப் போட்டியாளர்களின் குடும்பங்களிலும் அவருக்கு பெரும் மதிப்பும் மரியாதையும் கிடைத்தது. தற்போது சேரன், சமூக வலைதளங்களில் கட்சித் தலைவர்களை ஆபாசமாகத் தரம் தாழ்த்திப் பதிவிடுபவர்களை வன்மையாகக் கண்டித்துள்ளார். அதுமட்டுமல்ல நடிகர்களை அவமதித்து பதிவிடுவதையும் அவர் எதிர்த்துள்ளார். இதற்காக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில் 'நடிகர்களின் இத்தனை வருட உழைப்பை மதிக்காமல் அவர்களின் முன்னேற்றத்தின் காரணம் அறியாமல் ரசிகர்கள், விமர்சகர் என்ற பெயரில் போலியானவர்கள் ஆபாச வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் பேசுவதை பதிவிடுவதை எதிர்க்கிறோம்...' எனக் கூறி #CheranFansAgainstCyberBullying என்னும் ஒரு ஹேஷ்டேக்கையும் பதிவு செய்துள்ளார்.
சேரனின் இந்தப் பதிவிற்கு கருத்து தெரிவித்த நடிகர் விவேக் ட்விட்டரில், "நீங்கள் மிகச் சிறந்த சமுதாய நோக்கம் உள்ள தேசிய விருது பெற்ற படைப்பாளி. ஆகவே விஜய் சொல்வதுபோல் “ignore negativity”. அஜீத் சொல்வதுபோல் “let go”. நல்ல கருத்தினை பதிவிட்டு அமைதி, ஆனந்தமுடன் இருங்கள். Peace to all" என்று சேரனை ஆசுவாசப்படுத்தும் வண்ணம் பதிவிட்டுள்ளார்.
தற்போது சேரன் உருவாக்கிய #CheranFansAgainstCyberBullyingஹேஷ்டேக் டிரெண்டாகிவருகிறது.
இதையும் படிங்க: லேடி சூப்பர் ஸ்டாரை புகழ்ந்துதள்ளிய பாலிவுட் நட்சத்திரம்