கவிஞர் இந்துமதி பக்கிரிசாமி எழுதிய 'மழையில் சிவந்த மருதாணி' ஒலிப்புத்தக வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் சேரன், தவம் பட இயக்குநர் விஜய் ஆர். ஆனந்த், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாடகி தஞ்சை சின்னப்பொண்ணு, முனைவர் கவிஞர் இலக்குவனார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கவிஞர் இந்துமதி தனது தந்தைக்கு எழுதியுள்ள 'வாழ்க்கையிலே நீ எனக்கு தந்த பாடம்' என்கிற பாடலை தஞ்சை சின்னப்பொண்ணு குரலில் ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்துள்ளார். இந்த ஒலிப்புத்தகத்தை சேரன் வெளியிட விஜய் ஆர். ஆனந்த் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சேரன், "கவிஞர் இந்துமதி எழுதிய இந்தப் பாடலைக் கேட்கும்போது மனதை உலுக்கிவிட்டது. மேடை நாகரிகம் கருதி அழாமல் இருந்தேன். சினிமாவில் தந்தைகளின் பக்கத்தை யாருமே சொல்லவில்லையே என்கிற எண்ணம் எனக்கு நீண்ட நாள்களாகவே இருந்தது.
அம்மா சென்டிமென்ட்டை வைத்து பணம் சம்பாதிக்கும் கூட்டமாகவே இந்த சினிமா இருக்கும்போது முதன்முறையாக அப்பாவின் வாழ்க்கையை அப்பட்டமாகச் சொல்லி இதுதான் உன் வாழ்க்கை, போய் உன் வேலையைப் பார் என்று சொல்லி சமூகத்தை மாற்றிவிடலாம் என்கிற நோக்கில்தான் தவமாய் தவமிருந்து படம் எடுத்தேன்.
முன்பெல்லாம் ஒரு திரைப்படம் குறைந்தபட்சம் 50முதல் 100 நாள்கள்வரை ஓடின. அப்படி அந்தப்படம் ஓடும்போது ஒவ்வொரு நாளும் யாராவது ஒருவர் அந்தப் படத்தை பற்றி, அதில் உள்ள ஒரு புதுப்புது விஷயங்கள் பற்றி நம்மிடம் பாராட்டியோ விமர்சனம் செய்தோ பேசுவார்கள். அதைக் கேட்பதற்கு நமக்கு இன்னும் ஊக்கமாக இருக்கும்.