தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வேண்டும்' - முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்த பாரதிராஜா! - என் இனிய தமிழ் மக்களே

தமிழ்நாட்டில் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு, இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாரதிராஜா
பாரதிராஜா

By

Published : Aug 14, 2020, 5:34 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கிட்டத்தட்ட மார்ச் மாதத்திலிருந்து தற்போது வரை சுமார் 150 நாள்களாகத் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் பலருக்கும் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், "வணக்கம்! தமிழ்நாட்டில் பொது ஊரடங்கு தொடங்கி, இன்றோடு 150 நாட்கள் ஆகிவிட்டன. எங்கள் திரைப்படங்கள் திரையரங்கில் 150 நாட்கள் ஓடி சாதனை புரிந்தால் அப்படியொரு மகிழ்வும், கொண்டாட்டமும் கொள்வோம். ஆனால், பட வெளியீடுகள் இன்றி திரையரங்கையும் மூடியும், படப்பிடிப்புகளையும் நிறுத்தியும், நூற்றைம்பது நாட்கள் ஆகிறது என்ற வேதனையைத் தமிழ் சினிமா முதன் முறையாக இப்போது சந்தித்துள்ளது.

தற்போது வரை 80க்கும் மேற்பட்ட படங்களின், படப்பிடிப்புகள் தேங்கி நிற்கின்றன. கரோனா காலகட்டத்தில் நாங்கள் முழுமையாக அரசாங்கத்தோடு நின்று, எங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கிறோம். எத்தனையோ ஏழைத் தொழிலாளிகளின் வயிறு பட்டினியாகக் கிடக்கிறது. தொழில் நுட்பக் கலைஞர்களின் சிறு சேமிப்புகள் கரைந்து, திரைத்துறை மீண்டு வரும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பணம் போட்ட தயாரிப்பாளர்கள், பண உதவி செய்தவர்கள் என எல்லோரும் முதலீட்டின் மீதான வரவை எதிர்பார்த்து, இழப்பு மேல் இழப்பைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள். முதலீடு போடும்போதே இழப்பு என்ற நிலை மிகக் கொடுமையானது. இந்நிலை தொடராமல் தடுத்து தமிழ் சினிமா மீண்டும் மூச்சுவிட தாங்கள் தயவுசெய்து வழிவகை செய்ய வேண்டும்.

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அளித்த அனுமதியைப் போல, எங்களுக்கும் குறுகிய குழுவோடு, பொது இடங்களில் இல்லாமல், ஸ்டூடியோ அல்லது வீடுகளுக்குள் திரைப்பட படப்பிடிப்புகளைத் தொடர வழிவகை செய்ய, தயாரிப்பாளர்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.

நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தின அறிக்கையில் எங்கள் திரைத்துறை சிக்கல்களுக்கான விடுதலையும் இடம்பெற வேண்டும் என விரும்புகிறோம். நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details