சென்னை அண்ணா சாலையில் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத்தை திறந்துவைத்த பின் அச்சங்கத்தின் தலைவர் இயக்குநர் பாரதிராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதில், "தற்போது படம் எடுக்கக் கூடிய தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்னையைத் தீர்ப்பதற்காகவே நடப்பு தயாரிப்பாளர் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் தடையான அல்லது நிறுத்தப்பட்ட திரைப்படங்கள் அனைத்தையும் நடித்து முடித்த பின்னர் புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்பட வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம். ஆனால், திரையரங்கு உரிமையாளர்கள் அடாவடித்தனமாகச் செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
எங்களுடைய திரைப்படங்களை யாருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். விருப்பமுள்ளவர்கள் வாங்குவார்கள், இல்லையென்றால் எங்கு விற்க வேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும். எங்களுடைய திரைப்படத்தைப் பார்ப்பதற்குத்தான் திரையரங்கிற்கு மக்கள் வருகிறார்கள். எங்களுடைய திரைப்படங்கள் இல்லையென்றால் யாரும் திரையரங்கிற்கு வர மாட்டார்கள்.