ஆர்.கே. சுரேஷின் 'விசித்திரன்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் - ஆர்கே சுரேஷின் புதிய படங்கள்
சென்னை: ஆர்.கே. சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் 'ஜோசப்' திரைப்படத்தின் ரீமேக் ஆன 'விசித்திரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குநர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படம் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமான ஆர்.கே. சுரேஷ், ‘மருது’, ‘ஸ்கெட்ச்’, ‘பில்லா பாண்டி’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இது தவிர சில மலையாளப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இதனிடையே மலையாளத்தில் 2018இல் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற 'ஜோசப்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்.கே. சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
உடலுறுப்பு வியாபாரத்திற்காக கொலை செய்யப்படும் சம்பவத்தை மையமாக வைத்து சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைக்களத்தில் வெளியாகியிருந்த இந்தப்படத்தை இயக்குநர் எம். பத்மகுமார் இயக்கியிருந்தார்.
ஜோஜு ஜோர்ஜ் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் இயக்குநர் திலீஷ் போத்தன், ஆத்மியா ராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
தற்போது இந்தப்படத்தை 'விசித்திரன்' என்ற பெயரில் தமிழில் இயக்குநர் பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. மலையாள இயக்குநர் எம். பத்மகுமார் இந்தப் படத்தையும் இயக்குகிறார்.
ஆர்.கே.சுரேஷ் இதுவரை ஏற்காத புதுக்கதை என்பதால் அதற்காக உடலளவிலும், மனதளவிலும் தன்னைத் தயார்படுத்தி இப்படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் இரண்டு தோற்றங்களில் நடிக்கும் அவர், 73 கிலோ எடையில் இருந்து 95 கிலோ எடை வரை கூட்டியுள்ளார்.
இப்படத்தில் ஆர். கே. சுரேஷ் உடன் பூர்ணா, மதுஷாலினி உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துவருகிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.