சஸ்பென்ஸ், த்ரில்லர், திகில் என ஒரு சேர கலந்த கலவையாக ஆடியன்ஸை பரபரக்க வைத்த 'ஈரம்' படம் திரைக்கு வந்து செப்டம்பர் 11ஆம் தேதியுடன் 10 ஆண்டுகள் ஆகியுள்ளது.
இந்தப் படத்தில் ஹீரோவாக மிடுக்கான காவல் அலுவலராக, கலகலப்பான கல்லூரி இளைஞன் என இரு வேறு பரிமாணங்களில் தோன்றியிருப்பார் ஆதி. இந்தப் படத்துக்கு முன்னர் அவர் மிருகம் என்ற படத்திலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடித்திருப்பார்.
அதேபோல் ஹீரோயினாக சிந்து மேனன் நடித்திருப்பார். முக்கிய கதாபாத்திரத்தில் நந்தா நடித்திருப்பார். மேலும், சரண்யா மோகன், ஸ்ரீநாத், லட்சுமி ராமகிருஷ்ணன், கிருஷ்ணா உள்ளிட்ட பலரும் நடித்திருப்பார்கள்.
பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அறிவழகன் படத்தை இயக்கியிருப்பார்.
கேட்டட் கம்யூனிட்டி எனக் கூறப்படும் பல குடும்பங்கள் வசிக்கும் ஒரு அப்பார்ட்மெண்டில் ஒரு பெண் இறந்து நிலையில் கிடக்கிறார். அவர் இறப்பின் காரணம் என போலீஸ் விசாரணை வளையம் செல்ல, அடுத்தடுத்து அவிழ்க்கப்படும் முடிச்சுகள் அதிரவைக்கும் விதமாக அமைந்திருக்கும். பெண்ணின் மரணத்தின் பின்னணியில் நேரடியாக, மறைமுகமாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஏற்படும் திடுக்கிடும் நிகழ்வுகளுடன் இருக்கும் கதாபாத்திரங்களைப் போன்று, ரசிகர்களை டென்ஷனாக்கும் விதமாக இருக்கும்.
குறிப்பாக திகில் காட்சிகள் பேயை கண்முன்னே நிறுத்துகிறேன் என்று அலரவிடாமல் விஷுவல் எஃபெக்ட்ஸ் மூலம் மாயாஜாலம் காட்டி கிளாப்ஸை அள்ளியிருப்பார்கள். இடைவெளியை ஒட்டி வரும் ஒரு காட்சியில் திரையரங்கின் பாத்ரூமில் தன் இறப்புக்கு காரணமானவனை பயமுறுத்தும் பெண்ணின் ஆவியானது நீரில் நடந்த செல்லும் காட்சி அடுத்த சில நிமிடங்களில் பாத்ரூம் செல்ல இருந்தவர்களை கலங்க வைத்ததை மறுக்க முடியாது.
பெஸ்ட் மேக்கிங், திரைக்கதை அமைப்பு, விஷுவல் எஃபெக்ட்ஸ், பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்து ஏரியாக்களில் ரசிகர்களால் உச்சி கொட்டப்பட்ட ஈரம் திரைப்படம், கணிசமான வசூலையும் குவிக்கத் தவறவில்லை. 2009ஆம் ஆண்டில் வெளிவந்த, அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக இடம்பிடித்தது. இருந்தபோதிலும் விருது உள்ளிட்ட அங்கீகாரம் இதற்கு கிடைக்காமல் போனது பெரிய ஏமாற்றமே.
இந்த ஆண்டில் தேசிய விருதில் தமிழ் படங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக பல்வேறு தரப்பினரால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்று சிறந்த படைப்புக்கான அங்கீகாரத்தைப் பெறாமல் தமிழ் சினிமா தனித்துவிடப்பட்டிருக்கிறது என்பதற்கு 'ஈரம்' படத்தை உதாரணமாகக் கூறலாம்.