த.செ.ஞானவேல் இயக்கத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சூர்யா (Suriya) நடித்துள்ள படம் 'ஜெய் பீம்' (Jai Bhim). தீபாவளி விடுமுறையை முன்னிட்டு இம்மாதம் 2ஆம் தேதி வெளியான இப்படத்தில் ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது குறித்தும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சினை குறித்தும் ஜெய் பீம் திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த அரசியல் கட்சியினர், திரையுலகினர் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் படத்தில் இருப்பதாகக் கூறி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக 'ஜெய் பீம்' படக்குழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 5 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று வன்னியர் சங்கம் சார்பில் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் பலரும் சூர்யாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவருகின்றனர். அந்தவகையில் இயக்குநர் அமீர் சூர்யாவுக்கு ஆதவராக, "சமூகநீதியை நிலைநாட்ட வற்புறுத்தும் திரைப்படைப்புகளையும், அதை மிகுந்த சிரமத்துடன் உருவாக்கும் படைப்பாளிகளையும் காக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல ஒரு நல்ல சமூகத்தின் கடமையும் கூட. அந்த வகையில் 'ஜெய்பீம்' படக்குழுவினருடன் எப்போதும் நான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:பார்வதி அம்மாளை நேரில் சந்திக்கும் சூர்யா!