உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 600க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, இதிலிருந்து தற்காத்துக்கொள்ள இந்திய அரசு தேசிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
இதனால் மக்கள் அனைவரும் அவர்களது வீடுகளில் இருக்கவேண்டும் என அரசும் பிரபலங்களும் கூறிவருகின்றனர். இதையடுத்து, இயக்குநர் அமீர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இதற்கு முன்பு எத்தனையோ தொற்று நோய்கள் வந்தாலும் கரோனா வீரியம் அதிகளவில் பரவக்கூடியது என்பதால் இன்று நாடே முடங்கிக் கிடக்கிறது. இது அனைத்து மக்களுக்கும் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். 21 நாள்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நோய்க்கு பயந்து ஓடி ஒளிகிறோம் என்று அர்த்தமில்லை. துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்ற பழமொழி இருக்கிறது. கரோனா என்ற துஷ்டனை கண்டதால் நாம் ஒதுங்கி இருப்பது நல்லது. நாம் தனித்து இருப்பது நம்மை பாதுகாப்பதற்கு மட்டுமல்லாமல் நம் உறவுகளையும் சமூகத்தையும் பாதுகாப்பதற்காக தான்.