இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'வாட்ச்மேன்'. இப்படத்தை டபுள் மீனிங் புரொடக்சன் தயாரித்துள்ளது. படத்தில் ஜி.வி. பிரகாஷ் உடன் யோகிபாபு மற்றும் கோல்டன் ரெட்ரீவர் வகையை சேர்ந்த நாய் ஒன்றும் நடித்துள்ளது. இந்தப் படத்தை வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி உலகளவில் வெளியிட திரைப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தை பார்த்த இயக்குநர் பாண்டிராஜ் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
'ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து பார்த்தேன்' - 'வாட்ச்மேன்' படத்தை பாராட்டிய பாண்டிராஜ்! - 'வாட்ச்மேன்'
"இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள 'வாட்ச்மேன்' திரைப்படம், த்ரில்லர் மற்றும் நகைச்சுவையின் கலவையாக உள்ளது" என்று, இயக்குநர் பாண்டிராஜ் பாராட்டியுள்ளார்.
இது குறித்து இயக்குநர் பாண்டிராஜ் கூறுகையில், "வாட்ச்மேன் திரைப்படம், த்ரில்லர் மற்றும் நகைச்சுவையின் கலவையாக உள்ளது. படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து பார்த்தேன். திரைக்கதை மிகவும் சுவாரஸ்யமாகவும், எதிர்பாராத ஆச்சரியமான திருப்பங்களும் நிறைந்திருந்தது. இப்படத்தின் இயக்குநர் ஏ.எல் விஜய்க்கும் படக்குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள். படத்தின் நாயகன் ஜி.வி. பிரகாஷ் மற்றும் யோகிபாபு திறம்பட நடித்துள்ளனர். குறிப்பாக நாய்கள் வரும் காட்சிகளை விரும்பி பிரம்மித்து பார்த்தேன்", என்றார்.
இதனையடுத்து 'வாட்ச்மேன்' படத்தின் இயக்குநர் விஜய் கூறியதாவது, "பாண்டிராஜ் சார் போன்ற திரைப்பட இயக்குநரிடமிருந்து, இது போன்ற பாராட்டுகளைப் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ‘வாட்ச்மேன்' திரைப்படத்திற்கு கிடைத்த புகழாரம், திரைப்படத்திற்கு மற்றுமொரு வலிமை. இயக்குநர் பாண்டிராஜ் குடும்ப பார்வையாளர்களை தனது தொடர்ச்சியான படங்களின் மூலம் ஈர்த்தவர். அத்தகைய இயக்குநரிடமிருந்து பாராட்டுகளை பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.