சென்னை: 'ராஜாவுக்கு செக்' படத்தில் ஒரு காட்சியில் ஆடையின்றி நடித்த சிருஷ்டி டாங்கேவை படத்தில் பிரதான கேரக்டரில் நடித்த இயக்குநர் சேரன் பாராட்டியுள்ளார்.
திரில்லர் படமாக கடந்த வாரம் வெளியாகியிருக்கும் 'ராஜாவுக்கு செக்' ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் சேரன் கதையின் நாயகனாகவும், நடிகை சிருஷ்டி டாங்கே, சாரயு ஆகியோர் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களிலும் நடித்துள்ளார்கள்.
இதையடுத்து படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆடையில்லாமல் நடித்த சிருஷ்டி டாங்கேவை இயக்குநர் சேரன் ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர், ராஜாவுக்கு செக் படத்தில் ஒரு காட்சியில் சிருஷ்டி டாங்கே காட்சியின் முக்கியத்துவம் கருதி துணியின்றி நடித்திருப்பார்.. ஒரு டவல் மட்டுமே மேலே கிடக்கும்.. அந்த காட்சியில் நடிக்க ஒரு தைரியம் வேணும். இப்படத்தில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்கமுடியாதது. மிக்க நன்றி @srushtiDange என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு சிருஷ்டி டாங்கே நன்றி தெரிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் சேரன் நடித்திருக்கும் இந்தப் படத்தை, ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளுடன் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று கூறி விளம்பரம் செய்து வருகின்றனர்.
குழந்தைகள் தவறான பாதையில் செல்லக்கூடாது என்று பெற்றோர்கள் நினைத்துக்கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் வந்துள்ள இப்படத்தில் அதற்கான வழிமுறை, தீர்வு ஆகியவை சொல்லப்பட்டிருக்கின்றன. பிள்ளைகளை பாதுகாக்க சரியான பாதையை பெற்றோர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை 'ராஜாவுக்கு செக்' கூறுகிறது என்று இயக்குநர் சேரனும் தன் பங்குக்கு படம் குறித்து தெரிவித்தார்.