சென்னை:அசுரன் திரைப்படம் தேசிய விருது பெற்றதை அடுத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்காவில் இருந்து செய்தியாளர்களிடம் பேசிய தனுஷ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான அசுரன், ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்தப் படத்தை கலைப்புலி தாணு தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்திருந்தார். இந்நிலையில், சிறந்த தமிழ்ப்படம் என்ற பிரிவில் அசுரன் படத்துக்கும், சிறந்த நடிகருக்கான பிரிவில் அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷுக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக செய்தியாளர்கள் சந்திப்பு, படக்குழு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னையில் நடந்த இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர்கள் கென், நடிகை அம்மு அபிராமி, ஆடுகளம் நரேன், பவன், படத்தின் படத்தொகுப்பாளர் ராம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அசுரன் நன்றி தெரிவிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழு அப்போது, இயக்குநர் வெற்றிமாறன், படம் குறித்து பேசி முடித்ததைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ் அமெரிக்காவில் இருக்கிறார் எனவும், அங்கிருந்து உங்களிடம் தற்போது பேசுவார் எனவும் கூறி அலைபேசியில் அழைத்தார். அதனைத் தொடர்ந்து, மறுமுனையில் இருந்து நடிகர் தனுஷ் வீடியோ கால் மூலம் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ”ரொம்ப சந்தோஷமாக உள்ளது. தொடர்ந்து நீங்கள் எனக்கு அளித்து வரும் ஆதவுக்கு நன்றி. அசுரன் எனக்கு ஸ்பெஷலான படம். நான் நடித்த கதாபாத்திரங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது.
வீடியோ கால் மூலம் செய்தியாளர்கள், அசுரன் படக்குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்த தனுஷ் அந்த கேரக்டருக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. வெற்றிமாறன், தயாரிப்பாளர் தாணு, படத்துக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள்” எனக் கூறினார்.
இதையும் படிங்க:ஒருத்தனையும் விடாத 'கர்ணன்' : மிரட்டும் டீஸர்!