நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான வடசென்னை திரைப்படம் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதையடுத்து ஒரு ஏரியாவையே தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ரகளை செய்யும் மாஸான ரவுடியாக மாரி-2 படத்தில் நடித்தார்.
பின்பு மீண்டும் வெற்றிமாறன் கூட்டணியில் அசுரன் படத்தில் இணைந்தார் தனுஷ். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டே பிசியாக இருக்கும் இந்த வேலையில், கொடி படத்தின் இயக்குநர் ஆர்.எஸ். துரைசெந்தில்குமார் படத்தில் நடிக்க ஒப்பந்தமானது பலரையும் வியப்படைய வைத்தது.
சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது. துரைசெந்தில் குமார் - தனுஷும் இரண்டாவது முறையாக சேர்ந்திருக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், அப்பா, மகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப்படத்தில் மகனின் கதாபாத்திரம் ஒரு திருடன் என்றும் திருடன் கதாப்பாத்திரத்திற்கான நடிகை தேர்வு நடைபெற்று வருகிறதாம்.
மேலும், அப்பாவாக நடிக்கும் தனுஷிற்கு நடிகை சினேகா ஹீரோயினாக நடிக்கிறார். நடிகை சினேகா, இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் 2006-ல் வெளியான புதுப்பேட்டை படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடித்திருந்தார். அதன்பிறகு 13 வருடங்கள் கழித்து தற்போது தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்புகள் குற்றால பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு இயக்குநர் வெற்றிமாறன் வசனம் எழுதியுள்ளார். விவேக் - மெர்வின் இசையமைக்கின்றனர்.