சீனாவிலிருந்து பரவிய கோவிட்-19 இந்தியாவிலும் வேகமாகப் பரவிவருகிறது. இத்தொற்றைத் தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்ஒரு பகுதியாக நாளை மக்கள் சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என மோடி வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், திரைப்பிரபலங்கள் சிலர் ரசிகர்களுக்கு கோவிட்-19 குறித்து அறிவுரை வழங்கி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் தனுஷ் கரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கும் விதத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "இந்த கரோனா வைரஸ் நம் அனைவரையும் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. மூன்று மாதங்களுக்கு முன்பு நமக்கு இப்படியொரு சூழல் வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். போகட்டும். இந்த வைரஸ் தொடர்ந்து பரவாமல் தடுப்பது நமது கையில் தான் இருக்கிறது.
நமது பிரதமர் கேட்டுக்கொண்ட மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க, நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை, நாம் யாரும் வீட்டிலிருந்து வெளியே வராமல் இருக்க வேண்டும். அப்படி நாம் இருப்பதால் அரசும், மருத்துவர்களுக்கும் கரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு மிகப்பெரிய உதவியாக இருப்போம்.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தக ஊழியர்கள் என அனைவரும் அவர்களது உயிரை மட்டும் பணயம் வைத்துப் போராடவில்லை. அவர்கள் குடும்பத்தினர் உயிரையும் பணயம் வைத்துப் போராடி வருகிறார்கள். இவர்களுக்காக நாம் செய்ய வேண்டியது, செய்யக் கூடியது ஒன்றே ஒன்றுதான்.