'ஒய் நாட்' ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. தனுஷின் 40ஆவது படமான இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டன், மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
2020ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி திரைக்கு வரவிருந்த இப்படம், ஊரடங்கு காரணமாக தள்ளிப்போனது. இந்நிலையில், இப்படத்திலிருந்து வெளியான 'ரகிட ரகிட', 'புஜ்ஜி' உள்ளிட்ட பாடல்கள் சமூக வலைதளங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றன. படத்தின் ட்ரெய்லர் ஜூன் 1ஆம் தேதி வெளியானது.
இப்படத்தில் புரோட்டா மாஸ்டர் சுருளி கதாபாத்திரத்தில் வரும் தனுஷ், லோக்கல் டானாக இருந்து இன்டர்நேஷனல் டானாக மாறுவது போன்ற காட்சிகளும் அதிரடி வசனங்களும் இடம் பெற்றிருந்தன. ட்ரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளத்தில் வைரலானது. இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் ட்ரெய்லரை நைஜீரியா சிறுவர்கள் தத்ரூபமாக ரீமேக் செய்துள்ளனர். சிறுவர்களின் இந்தச் செயலை பாராட்டும் விதமாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், 'ஜகமே தந்திரம்' ட்ரெய்லர், சிறுவர்களின் ட்ரெய்லர் இரண்டையும் இணைத்து, தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். இந்த ட்ரெய்லர் தற்போது நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
சமீப காலமாக சமூகவலைதளத்தில், சிறுவர்கள் தங்களுக்குப் பிடித்தமான சினிமா காட்சிகளை அப்படியே ரீமேக் செய்து வீடியோக்களாக பதிவிட்டு வருகின்றனர். தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான 'வக்கீல் சாப்' படத்தின் சண்டைக் காட்சியை சிறுவர்கள் அப்படியே தத்ரூபமாக நடித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.