இந்தியாவில் தற்போது 4ஜி சேவை பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, 5ஜி சேவையை உலகம் முழுவதும் அறிமுகமாகவுள்ளது. இந்தியாவில் இதற்கான முதற்கட்ட பணிகள் நடந்துவருகின்றன. இதை செயல்படுத்த ஜியோ, ஏர்டெல் போன்ற சீனா அல்லாத வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து சோதனை செய்ய ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.
5ஜி சேவைக்குத் தடை கோரி மனு
இந்நிலையில், 5ஜி சேவைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடிகை ஜுஹி சாவ்லா, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக நடிகை ஜுஹி சாவ்லா தாக்கல் செய்திருந்த மனுவில், ’நாங்கள் புதிய தொழில்நுட்பத்துக்கு எதிரானவர்கள் அல்ல. புதுப்புது தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
செல்போன் டவர்களிலிருந்து வெளியிடப்படும் ரேடியோ கதிர்கள், மனிதர்களுக்கு ஆபத்தை உண்டாக்கும். அதனால் இதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள 5ஜி தொழில் நுட்பத்திற்குத் தடை விதிக்க வேண்டும். மேலும் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றுக்கு இதனால் எந்தவித ஆபத்தும் இல்லை என சான்றளிக்க, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.