ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு மீண்டு எழுந்த பெண்ணான லட்சுமி அகர்வாலின் வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து உருவான திரைப்படம் 'சப்பாக்'. இப்படத்தை இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கினார். சமீபத்தில் வெளியான இப்படத்திற்கு பல மாநில அரசுகள் வரிவிலக்கு அளித்திருந்தன. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் தெருவில் நடந்து செல்லும்போது அவளை இந்த சமூகம் பார்க்கும் கண்ணோட்டத்தையும் தீபிகா வீடியோவாக பதிவாக்கினார். இதனையடுத்து, இன்று தனது குழுவினருடன் மும்பை நகருக்குள் சென்று ஆசிட்டை எவ்வளவு எளிதாக வாங்க முடிகிறது என்பதை வீடியோ எடுத்து தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தீபிகா குழுவில் இருந்த நபர்கள் மாறுவேடமிட்டு ரகசிய கேமிரா பொருத்தி கடைகளுக்கு சென்று ஆசிட் வாங்குவது படமாக்கப்பட்டது. இதனை தீபிகா தனது காரில் அமர்ந்திருந்து கண்டுகொண்டிருந்தார். கடைக்காரர்கள் யாரும் எதுவும்ம் கேள்வி கேட்காமல் கேட்டவுடன் ஆசிட்டை கொடுத்தனர்.
அதில் ஒரேயொரு கடைகாரர் மட்டும் ஏன் ஆசிட் வாங்குகிறாய்? பெண்ணின் மீது வீசவா? உன் ஐடி கார்டு வேண்டும் அப்போதுதான் ஆசிட் தருவேன் என்று கூற மாறுவேடமிட்ட நபர் அங்கிருந்து நகர்கிறார்.
இதனை தொடர்ந்து தீபிகா, சட்டத்துக்கு புறம்பாக நடக்கும் ஆசிட் விற்பனையை நிறுத்த இந்த சமூகம் ஒன்று சேர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். ஐந்து நிமிடங்கள் ஒடும் இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில், ரசிகர்களாலும் இணையவாசிகளாலும் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.