1983ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையைக் கைப்பற்றிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டும், கபில் தேவ் தலைமையிலான அணி மேற்கொண்ட பயணத்தை அடிப்படையாகக் கொண்டும் உருவாகிவரும் திரைப்படம் ’83’
கபீர் கான் இயக்கும் இந்தத் திரைப்படத்தில் ரன்வீர் சிங் கபில் தேவாக நடித்துவரும் நிலையில், கபில் தேவின் மனைவி ரோமி பாட்டியாவாக தீபிகா படுகோன் தோன்றும் புகைப்படத்தை கடந்த 19ஆம் தேதி தன் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
தங்களது கனவுகளைத் தாண்டி, தங்களின் கணவர்களின் கனவுகளுக்கு முக்கியத்துவம் தரும் அனைத்துப் பெண்களுக்குமான கவிதையாக இப்படம் அமையும் எனக் குறிப்பிட்டு இந்தப் புகைப்படத்தை தீபிகா பகிர்ந்திருந்த நிலையில், தீபிகாவின் இந்தக் கருத்திற்கு தற்போது கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
”ஒரு படத்தை விளம்பரப்படுத்துவதற்காக தீபிகா இதுபோன்ற பின்னோக்கிய கருத்துகளைப் பகிர்வது எரிச்சலூட்டுகிறது” என்றும், ”உங்கள் கணவரின் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக நீங்கள் உங்கள் வேலையை விட்டுச் செல்வீர்களா?” எனக் கேள்வி எழுப்பியும் ரசிகர்கள் கண்டனக் குரல்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.
”மேலும், இது 1983ஆம் வருடம் அல்ல. பாலின ஏற்றத்தாழ்வுகள் அழிந்துவரும் நிலையில், தங்கள் மனைவிகளின் கனவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கணவர்களை இந்த நூற்றாண்டிலாவது எதிர்நோக்கத் தொடங்குவோம்” எனவும் தீபிகாவிற்கு மற்றொரு சமூக வலைதள பயனாளி அறிவுறுத்தியுள்ளார்.
சப்பக், பிகு உள்ளிட்ட பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை மையப்படுத்தி இதற்கு முன் தீபிகா நடித்துள்ள போதிலும், தீபிகாவின் 83 திரைப்படம் குறித்த இந்தப் பதிவு பெண்ணியவாதிகளின் மத்தியிலும் இணைய பயனாளிகள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:'83' திரைப்படத்தின் புதிய லுக்! - ரோமி பாட்டியாவாக தீபிகா படுகோன்