காதலை ஏற்க மறுத்த ஒரே காரணத்திற்காக தனது 15 வயதில் ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளானவர் லட்சுமி அகர்வால். கடந்த 2005இல் நடைபெற்ற இந்தச் சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. ஆசிட் வீச்சால் தனது அழகான முகத்தை இழந்து சிதைந்த முகத்துடன் காணப்பட்ட லட்சுமி அகர்வால் பல இன்னல்களை அனுபவித்தார். ஆனாலும் மனம் தளராத லட்சுமி 'சான்வ் பவுண்டேசன்' என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை தொடங்கி ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறார். இதற்காக லட்சுமி அகர்வால் சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளார்.
இந்நிலையில், 'ராஸி' படத்தை இயக்கிய மேக்னா குல்சார் லட்சுமி அகர்வாலின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கியுள்ளார். இப்படத்திற்கு 'சப்பாக்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் லட்சுமி அகர்வாலாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இப்படத்தை பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தீபிகா படுகோனே தயாரித்துள்ளார்.