கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விதமான விளையாட்டுத் தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாட்டு வீரர்கள், தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் தற்போது சமூகவலைத்தளப்பக்கத்தில் ட்ரெண்ட் ஆகிவருகிறார். சில தினங்களுக்கு முன் தனது மனைவியுடன் 'அலா வைகுந்தபுரமுலோ' படத்தில் இடம் பெற்ற 'புட்ட பொம்மா புட்ட பொம்மா' (Butta bomma) பாடலுக்கு டிக் டாக்கில் நடனமாடி பதிவிட்டிருந்தார். டேவிட் வார்னரின் நடனத்தை விட அவருக்கு பின்னால் அவரது குழந்தை செய்த சுட்டிதனம் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது.
இதற்கு முன் தனது மகள் ஐவி மேவுடன் இணைந்து டேவிட் வார்னர் பாலிவுட் பாடலான ’ஷீலா கி ஜவானி’ பாடலுக்கு நடனமாடும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.
தற்போது இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான 'போக்கிரி' படத்தின் வசனத்தை பேசி டிக் டாக் வீடியோ பதிவிட்டார். இந்த வீடியோவில் டேவிட் வார்னர் ஐபிஎல் போட்டியில் தான் விளையாடும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஜெர்ஸி அணிந்திருந்தார்.
வீடியோவிற்கு டேவிட் வார்னர், "என்ன படம் என்று தெரிகிறதா? நான் முயற்சி செய்தேன்" என பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவை சில நிமிடத்திலேயே தெலுங்கு ரசிகர்களால் அதிகமாக சமூகவலைதளத்தில் பகிரப்பட்டது.
டேவிட் வார்னரின் வீடியோவை பார்த்த பூரி ஜெகந்நாத், "டேவிட் இதுதான் நீங்கள். உறுதியும் ஆக்ரோஷமும் இந்த வசனம் உங்களுக்கு சரியாக பெருந்தும். நீங்கள் ஒரு நடிகராகவும் சிறப்பாக நடிப்பீர்கள். என் படத்தில் நீங்கள் ஒரு காட்சியில் வரவேண்டும் என்று விரும்புகிறேன்." என்று வாழ்த்தி பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக டேவிட் வார்னர், "முயற்சி செய்கிறேன் சார். சன் ரைசர்ஸ் ரிலீஸ் அல்லது விநியோகம் செய்கிறதா என்று பார்க்கவேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.