தர்பார் படத்தில் சர்ச்சைக்குரிய வசனமான சிறைச்சாலையில் காசு இருந்தால் ஷாப்பிங்கூட போகலாம் என்ற வசனம் நீக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் நேற்று (ஜன.9) வெளியான படம் 'தர்பார்'. இதில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர்.
பொங்கலை முன்னிட்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. திரைத்துறையில் ஜாம்பவானா ரஜினி சினிமா வழி அரசியல் பேசுவதில் தான் ஒரு கில்லாடி என்பதை அவ்வப்போது நிரூபிப்பது வழக்கம். அதுபோலவே இந்த படத்தில், சிறைச்சாலையில் காசு இருந்தால் சிறைக்கைதிகூட ஷாப்பிங் போகலாம் என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இது சசிகலாவை குறித்தே பேசியதாக பிரச்சனை எழுந்தது.
இதனையடுத்து, படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், எங்களின் தர்பார் திரைப்படத்தில், கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ அல்லது யார் மனதையும் புண்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல. இருப்பினும் அந்த குறிப்பிட்ட சில வார்த்தைகள் சிலரது மனதை புண்படுத்துவதுவாக தெரிய வந்ததால், அது படத்திலிருந்து நீக்கப்படுவதாக தெரிவித்துக் கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளனர்.