ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி காந்த் நடித்துள்ள படம் தர்பார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், அனிருத், தயாரிப்பாளர் சுபாஷ் கரன், சுனில் ஷெட்டி, கதாசிரியர் கலைஞானம், நடிகர் அருண்விஜய், விவேக், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
‘பொதுவ நான் அழமாட்டேன்... ஆனால் இந்தப் படத்துக்காக!’ - அனிருத் உருக்கம் - தர்பார் இசை வெளியிட்டு விழாவில் அனிருத்
தர்பார் படத்திற்கு இசையமைத்த போது ஸ்டுடியோவில் இருந்து தான் அழுததாக இசையமைப்பாளர் அனிருத், அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.
இந்த விழாவில் அனிருத் பேசுகையில், ‘இந்த அரங்கத்தில் கூடியிருக்கும் அனைவரும் ரஜினி ரசிகர்கள்தான். என்னுடைய ரசிகர்கள் கிடையாது. நான் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திரைத்துறைக்கு வந்தேன். அப்போது ரஜினியின் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவு. அந்தக் கனவு நிறைவேறி உள்ளது.
ரஜினிக்கு இரண்டாவது முறையாக நான் 'தர்பார்' படத்திற்கு இசை அமைக்கிறேன். இது என் வாழ்வில் நிகழ்ந்துள்ள அற்புதமாகவே பார்க்கிறேன். பொதுவாக அழமாட்டேன். ஆனால் இந்த படத்திற்கு இசையமைத்த போது ஸ்டுடியோவில் இருந்தபோது அழுதுவிட்டேன். உலகிலேயே நமக்கு பிடித்தமான ஒரு நபருக்காக இசையமைத்துள்ளோம் என்று நினைத்தவுடன் அழுகை வந்துவிட்டது. ரஜினிகாந்த் நடிப்பில் நான் முதன்முதலாக பார்த்த படம் 'அண்ணாமலை' அந்தப் படத்தில் வரும் டைட்டில் கார்ட் மியூசிக் மிகவும் பிடித்தமான ஒன்று’ என்றார்.