ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், அனிருத், தயாரிப்பாளர் சுபாஷ் கரன், சுனில் ஷெட்டி, கதாசிரியர் கலைஞானம், நடிகர் அருண்விஜய், விவேக், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் அருண் விஜய் பேசுகையில், ‘ரஜினியை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் புதிதாகப் பார்ப்பது போலவே இருக்கிறது. எந்த நாட்டிற்கு போனாலும் நெஞ்சு நிமிர்த்தி சொல்லலாம் சூப்பர் ஸ்டார் எங்கள் நாட்டவர் என்று. நான் முதன்முறையாக படத்தில் நடிக்க வந்தபோது முதல் காட்சிக்காக என்னை கையைப் பிடித்து கேமரா முன்பு அழைத்து வந்தவர் ரஜினி தான்’ என்றார்.
தொடர்ந்து நடிகை நிவேதா தாமஸ் பேசுகையில், ‘படப்பிடிப்பில் வெயில், மழையில் முகம் சுளிக்காமல் நடித்தார். நாம் சாப்பிடும் சாப்பாட்டைக் கூட, நாம் கொடுக்கும்போது தயங்காமல் வாங்கிச் சாப்பிடுவார். என்னை அவர் வீட்டிற்கு அழைத்தார். அப்பொழுது என்னால் செல்ல முடியாத சூழ்நிலை இருந்தது. எனக்கு ஒரு ஆசை உள்ளது. ரஜினிக்கு எனது வீட்டில் சமையல் செய்து பரிமாற ஆசைப்படுகிறேன்’ என்றார். இதற்கு ரஜினியும் உடனே சம்மதம் தெரிவித்தார்.
சண்டைப் பயிற்சியாளர்கள் ராம் - லெட்சுமணன் இவர்களைத் தொடர்ந்து சண்டைப் பயிற்சியாளர்கள் ராம் - லெட்சுமணன் பேசுகையில், ‘இது தமிழ்நாடு இல்லை தாய்நாடு. தர்பார் படம் ஷூட்டிங்கில் ஒரு பிரமாண்ட சண்டைக்காட்சியை அமைக்க எண்ணி அதை தயார் செய்துவிட்டோம். அதை ரஜினியிடம் கூறுவதற்காக கேரவனுக்குச் சென்றோம். அப்போது அவர் வேட்டி சட்டை அணிந்திருந்தார்.
எங்களுக்கு சந்தேகம் எழுந்தது. இவரால் எப்படி சண்டை காட்சியில் நடிக்க முடியும் என்று. ஆனால் சிறுது நேரத்தில் காஸ்ட்யூம் மாற்றிக்கொண்டு டூப் இல்லாமல் அவரே நடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்’ என்றனர்.