சென்னை: சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் தனது ஆதரவாளர்களைத் திரட்டி புதிதாகத் தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற சங்கத்தை தொடங்கியுள்ளார்.
இதையடுத்து இன்று (டிச. 07) நடைபெற்ற தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் டி. ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் சினிமா தயாரிப்பாளர்கள் மத்தியில் நிலவிவரும் விபிஎஃப் கட்டணம் தொடர்பான சிக்கல்களை முழுமையாகத் தீர்க்க வேண்டும். விபிஎஃப் கட்டணங்களை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும்.
க்யூப் மற்றும் இதர சர்வீஸ் புரோவைடர் நிறுவனங்களிடமிருந்து தயாரிப்பாளர்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை அந்த நிறுவனங்கள் உடனடியாகத் திருப்பித்தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி க்யூப் மற்றும் சர்வீஸ் புரோவைடர் நிறுவனங்களுடன் சுமுக பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டோம்.