தமிழ்த் திரையுலகில் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும், நகைச்சவை கலைஞராகவும் திகழ்ந்தவர் கிரேஸி மோகன். இது தவிர பல மேடை நாடகங்களையும் இயக்கி நடித்துள்ளார். அடிப்படையில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவரான இவர், தனது கல்லூரி காலத்திற்கு பின் நண்பர்களுடன் இணைந்து கிரேஸி என்னும் நாடகக் குழுவின் மூலமாக பல மேடை நாடகங்களை இயக்கி நடித்துவந்தார்.
பின்னர் தமிழ் சினிமாவின் இயக்குநர் சிகரம் பாலசந்தர் இயக்கிய ’பொய்க்கால் குதிரை’ திரைப்படத்தில், முதல்முறையாக வசனகர்த்தாவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பாலசந்தரின் பல்வேறு படங்களுக்கு வசனம் எழுதிய கிரேஸி மோகன், கமலுடன் அதிகமான படங்களில் பணியாற்றியுள்ளார்.
குறிப்பாக கமல் நடித்த நகைச்சுவை படங்களுக்கு இவர் எழுதிய வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பிரபலம் என்றே கூறலாம். இவர், அபூர்வ சகோதரர்கள், சதி லீலாவதி, மைக்கேல் மதன காமராஜன், வசூல் ராஜா எம்பிபிஎஸ், காதலா காதலா உள்ளிட்ட திரைப்படங்களில் கமலுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதில் வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் இவர் ஏற்று நடித்த மார்க்கபந்து கதாபாத்திரம் அனைவராலும் ரசிக்கப்பட்டது.
கடந்த சில காலமாக கிரேஸி மோகன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 66. சிறந்த நகைச்சுவை திரைக்கதைகளையும், வசனங்களையும் அளித்த கிரேஸி மோகனின் மறைவு தமிழ்த் திரையுலகினரை சோகத்தில் ஆழத்தியுள்ளது.