சென்னை:தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது. இந்த நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்த நிலையில், செயற்குழு ஒப்புதலுடன் பதவிக்காலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் 2019ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி, தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
நடிகர் சங்கத் தேர்தல்
நடிகர் விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டனர். பாண்டவர் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிட்டனர். துணைத் தலைவர்கள் பதவிக்கு இந்த அணியின் சார்பில் பூச்சி முருகன், நடிகர் கருணாஸ் ஆகியோர் போட்டியிட்டனர்.
சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு கே. பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு நடிகர் பிரசாந்த் ஆகியோர் போட்டியிட்டனர். துணைத் தலைவர் பதவிகளுக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிட்டனர். தபால் ஓட்டுகளையும் சேர்த்து வாக்களிக்கத் தகுதியுள்ள 3,173 பேரில் 1,604 பேர் ஓட்டு போட்டனர்.
நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில், பதவிக்காலம் முடிந்த செயற்குழு மூலம், ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபனை தேர்தல் அலுவலராக நியமித்து தேர்தலை அறிவித்துள்ளது. இது சட்டவிரோதமானது என்றும், சங்க உறுப்பினர்கள் பலர் நீக்கப்பட்டுள்ளதால், முறையான வாக்காளர் பட்டியலைத் தயாரித்து நியாயமாக தேர்தலை நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் நடிகர் ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 61 உறுப்பினர்கள் அளித்தப் புகாரின் அடிப்படையில், நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்திவைக்க மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார்.