சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கரோனா அச்சம் காரணமாக, இந்தியாவில் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். அப்படி வீட்டிற்குள் முடங்கியுள்ள மக்களுக்குப் பொழுது போக்கு அம்சமாக இருப்பது தொலைக்காட்சியும் இணையமும்.
தொலைக்காட்சியில் மக்களைக் கவரும் வகையில் போட்டிபோட்டுக் கொண்டு புதுப்படங்களையும் பழைய படங்களையும் ஒளிபரப்பி வருகின்றனர். மேலும் பழைய பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களையும் மறு ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தமிழ் சினிமா வரலாற்றில் இது வரை எத்தனையோ கதாநாயகர்களை நாம் பார்த்திருக்கிறோம். சில நடிகர்கள் நடித்த படங்கள் மட்டுமே, மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்ற படங்களாக மறக்கமுடியாத காவியங்களாக இன்றும் மக்களால் போற்றப்படுகிறது. அந்த வகையில் , திரைத்துறையில் இன்றும் மக்களால் போற்றப்படும் நடிகர்களாக இருந்தாலும் மக்களின் செல்வாக்கை பெற்ற நடிகர் என்றால் எம்ஜிஆர் என்று சொல்லலாம்.
'பொன் மனச் செம்மல்', 'மக்கள் திலகம்', 'கலைப்பேரரசர்', 'வசூல் சக்கரவர்த்தி', 'முடி சூடா மன்னன்', 'புரட்சித் தலைவர்' என மக்களால் பேரன்போடு அழைக்கப்பட்டவர் எம்ஜிஆர். அதுமட்டுமின்றி எம்ஜிஆர் மக்கள் மனதில் எவர் கிரீன் ஹீரோவாக இன்றும் ஜொலித்துக்கொண்டு இருக்கிறார்.
இன்றளவும் அவரது படங்களுக்கு இருக்கும் மவுசு இன்றைய சூப்பர் ஸ்டாராக தங்களை நினைத்து இருக்கும் நடிகர்களுக்கும் இருக்கிறதா என்று, நாம் நினைத்தால் நிச்சயம் ஏமாற்றமே மிஞ்சும். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல கோணங்களில், தமிழ் சினிமாவில் வலம் வந்த எம்ஜிஆரின் காலத்தால் அழியாத காவியங்களான அவரது படங்களில் உள்ள சமூக அக்கறை இன்றைய நாயகர்கள், அனைவரும் பின்பற்றி நடிக்கக் கூடியவைகளாக இருக்கின்றன.
இயல்பான நடிப்புக்கு சொந்தக்காரராக விளங்கிய புரட்சித் தலைவரின் படங்கள் சாகாதவரம் பெற்றவை. இன்றைய காலகட்டத்திலும் பொருத்திப் பார்க்கக் கூடிய படங்களாக அமைந்திருப்பது தான் இதற்குக் காரணம். முதியோர்கள் மட்டுமல்ல, இன்றைய தலைமுறையினரும் கண்டுகளிக்கும் படமாக அவரின் படங்கள் உள்ளன என்றால், அது மிகையல்ல. அதற்கு எடுத்துக்காட்டு கடந்த 20.03.2020 முதல் 23.04.2020 வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களிலும் உள்ள தொலைக்காட்சிகளில் ஓடியது எம்ஜிஆரின் படங்கள் தான்.
எம்ஜிஆரின் ரசிகர் அருணாச்சலம் தற்போது தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டு, அனைத்துத் தரப்பினரும் வீடுகளில் முடங்கி இருக்கும் போதும் எம்ஜிஆரின் எவர் கிரீன் படங்கள் மக்களின் நேரங்களை ஆக்கிரமித்துக் கொண்டது என்னவோ நிஜம். ஒன்றல்ல... இரண்டல்ல சுமார் 70 படங்கள் ஒரு மாத காலத்தில் தமிழ்நாட்டின் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் எம்ஜிஆரின் படங்கள் ஒளிபரப்பானது. இது உலக தொலைக்காட்சி வரலாற்றுச் சாதனையாகும்.
தமிழ்நாட்டில் உள்ள முதன்மை தொலைக்காட்சி சேனல்களில் மார்ச் 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 25 ஆம் தேதி வரை 'அடிமைப்பெண்', 'நம் நாடு', 'என் அண்ணன்', 'தேடி வந்த மாப்பிள்ளை', 'எங்கள் தங்கம்', 'குமரிக்கோட்டம்', 'ரிக்ஷாக்காரன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'தாய்க்குத் தலை மகன்', 'பெற்றால் தான் பிள்ளையா', 'எங்க வீட்டுப்பிள்ளை', உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன.
இந்தப் படங்களை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை, குடும்பத்துடன் கண்டு களித்தது இந்தப் படங்களுக்குரிய மவுசு மக்களிடம் எந்த அளவு தாக்கத்தினை ஏற்படுத்தி இருந்து வருகிறது என்பதை புரிய வைத்துள்ளது.
இப்போதைய நடிகர்களின் படங்கள் முதல் ரவுண்டிலேயே மண்ணைக் கவ்வி வரும், இந்த காலகட்டத்தில் அன்றும் இன்றும் என்றும், 'தான் ஒரு எவர் க்ரீன் ஹீரோ' என மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார், மக்கள் திலகம் எம்ஜிஆர்.
இதையும் படிங்க: கரோனா காலத்திலும் கைவிடாத எம்ஜிஆர்