தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

புஷ்பா வெற்றியையடுத்து விரைவில் நடிகர் அவதாரம்? மனம் திறந்த தேவி ஸ்ரீ பிரசாத்!

புஷ்பா பின்னணி இசையின் வெற்றியையடுத்து விரைவில் நடிகராக அறிமுகமாக இருக்கிறேனா? என்பது குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மனம் திறந்து பேசியுள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத்
தேவி ஸ்ரீ பிரசாத்

By

Published : Dec 26, 2021, 9:24 AM IST

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜீன் நடிப்பில் திரையரங்குகளில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான பான் இந்தியா திரைப்படம் 'புஷ்பா - தி ரைஸ்'. இதில் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

திரைப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். புஷ்பா படத்தின் பாடல்கள், பின்னணி இசை பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. இதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத்.

ஐந்து மொழிகளிலும் புஷ்பாவின் பாடல்கள் வெற்றிபெற்றுள்ளன. எப்படி உணர்கிறீர்கள்?

உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறேன். எடுத்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. படத்தின் ஒவ்வொரு பாடலையும் முடிக்க கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது. குறிப்பிட்ட மொழிக்கு ஏற்ற பாடகர்களை கவனமாக தேர்வு செய்தேன்.

'ஓ சொல்றியா' பாடலை தமிழில் பாடிய ஆண்ட்ரியா படப்பிடிப்பில் பிஸியாக இருந்தபோதிலும் அனுமதி பெற்று வந்து பாடிக் கொடுத்தார். கவிஞர் விவேகா பாடல் வரிகளை சிறப்பாக வடிவமைத்தார். 'ஸ்ரீவள்ளி' பாடலைப் பாடுவதில் சித் ஸ்ரீராம் மிகுந்த ஆர்வம் காட்டினார். இது டப்பிங் படம் அல்ல, அகில இந்திய படம் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். அதற்குண்டான தரம் இருக்க வேண்டும் என விரும்பினோம்.

முழு ஒத்துழைப்பு அளித்த அனைத்து பாடகர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றியை எப்படிக் கையாளுகிறீர்கள்?

வெற்றியோ, தோல்வியோ எப்பொழுதும் நான் அதை என் இதயத்திற்கு மட்டுமே எடுத்து செல்வேன், தலைக்கு அல்ல. எல்லாப் பாடல்களுக்கும் ஒரே மாதிரியான உழைப்பை அளிக்கிறோம். சில பாடல்கள் ஹிட் ஆகின்றன, சில பாடல்கள் ஹிட் ஆவதில்லை. இரண்டிற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். உண்மையாகவும், கடுமையாகவும் உழைப்பது மட்டுமே நமது கைகளில் உள்ளது.

சுகுமார், அல்லு அர்ஜுனுடனான உங்களின் கெமிஸ்ட்ரி பற்றி...

அல்லு அர்ஜூனும், நானும் நெருங்கிய நண்பர்கள். அவர் மிகவும் கடின உழைப்பாளி, அர்ப்பணிப்புள்ள நடிகர். அவரது வெற்றியை நான் கொண்டாடுகிறேன். எனது வளர்ச்சியை கண்டு அவர் ஆனந்தப்படுகிறார். தமிழ் சினிமாவை நோக்கி அவரை நகர்த்திய முக்கிய நபர்களில் நானும் ஒருவன். முக்கியமான ஒரு சில முடிவுகள் எடுக்கும் முன்பாக அவர் என்னுடன் ஆலோசிப்பதும் உண்டு.

தமிழ்நாட்டில் புஷ்பாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததில் மேலும் மகிழ்ச்சி. சுகுமார் எனக்கு அண்ணன் மாதிரி. நான் சந்தித்த அன்பான மனிதர்களில் அவரும் ஒருவர். அவர் மிகவும் மென்மையாக பழகக்கூடியவர். எங்கள் மூவருக்கும் பரஸ்பர புரிதல் உள்ளது. நாங்கள் பணியாற்றும் திரைப்படங்களில் அது பிரதிபலிக்கிறது.

'புஷ்பா' படத்திற்கு பின்னணி இசை அமைப்பதில் உங்களுக்கு எந்தளவு சுதந்திரம் இருந்தது?

சுகுமாரைப் பொறுத்தவரையில் அவர் முழுமையான படைப்பு சுதந்திரத்தை அளிக்கிறார். பின்னணி இசை பணிகளின் போது, அவரால் வர முடியவில்லை. ரெக்கார்டிங் முடிந்தவுடன் அனுப்புங்கள் என்று சொன்னார். அந்த அளவுக்கு என் வேலையில் அவருக்கு நம்பிக்கை இருக்கிறது.

இது ஒரு புதிய முயற்சி என்பதால் பின்னணி இசையை அவர் பார்க்க வேண்டும் என நான் விரும்பினேன். ஆனால், அதை அனுப்பினால் போதும் என்று அவர் வலியுறுத்தியோடு, வெகு சில சிறிய மாற்றங்களை மட்டுமே சொன்னார். நாங்கள் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து வைத்துள்ளோம்.

இப்போதெல்லாம் பாடல்களே இல்லாமல் சில படங்கள் வெளியாகின்றன. நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?

உலக அளவில் இசைக்கு எப்போதும் முக்கியத்துவம் உண்டு. வெளிநாட்டு படங்களில் பாடல்கள் இல்லை. ஆனால் திரைப்படத்திலிருந்து இசையை பிரிக்கக்கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். பாடல்கள் பார்வையாளர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட உணர்வைத் தருகின்றன.

மேலும் அவர்களை படத்துடன் ஒன்றவைக்க உதவுகின்றன. பாடல்கள் இல்லாத திரைப்படங்களை நான் ரசிக்கிறேன். இருப்பினும் அதிக ஆற்றல், இணைப்பை கொண்டு வரும் பாடல்களைக் கொண்ட படங்களையே நான் இன்னும் அதிகமாக விரும்புகிறேன்.

முன்பெல்லாம் பாடல்கள் மொழியின் அடிப்படையில் வேறுபடுத்தப்பட்டன. இது இப்போது மாறிவிட்டதாகத் தெரிகிறதா?

இசைக்கு மொழி இல்லை என கூறப்படுகிறது. உண்மையில் இசைக்கு மொழி இல்லை. ஆனால், பாடல் வரிகள் அதை ஒரு குறிப்பிட்ட இடத்துடன் இணைக்கின்றன. நம் நாட்டில் பல மொழிகள் இருப்பதால், ஒரு பாடல் அனைவரையும் சென்றடைவது கடினம். நான் உருவாக்கும் பாடல்களை அனைத்து மாநில மக்களும் ரசிக்க வேண்டும் என்பதை சவாலாக எடுத்துக்கொள்கிறேன்.

டிஎஸ்பி ஒரு இசை இயக்குநரா அல்லது இசையமைப்பாளரா?

நான் ஒரு இசை ரசிகன். இளையராஜாவின் பக்தன் என்று கூட சொல்லலாம். அவர் எனக்கு கடவுள் போன்றவர். ஒரு படத்திற்கு பின்னணி இசை எப்படி அமைக்க வேண்டும் என்பதை மாற்றி அமைத்தவர் அவர். பாடல்களுக்கு எந்தளவும் குறையாத முக்கியத்துவத்தை பின்னணி இசைக்கும் வழங்குவதையே நான் விரும்புகிறேன்.

அகில இந்திய திரைப்படங்கள் பற்றிய உங்களது பார்வை?

பெயரும், புகழும் பெறத்தான் இந்தத் துறைக்கு வருகிறோம். அதற்கு பிராந்திய கட்டுப்பாடுகள் இருக்கக்கூடாது. இந்தித் திரைப்படங்கள் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படுவதால் அவை அகில இந்திய படங்கள் என அழைக்கப்படுவதில்லை. பிராந்திய சினிமாக்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.

சமீபகாலமாக பாகுபலி, கேஜிஎஃப், புஷ்பா போன்ற படங்கள் மூலம் இது மாறி வருகிறது. நாம் ஏன் ஒரு பிராந்தியத்திற்குள் நம்மை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்? அகில இந்திய படம் என்ற வார்த்தை விரைவில் மறைந்து, அனைத்து இந்தியாவுக்கான படமாக மாறி பின்னர் உலக சினிமாவாக மாறும்.

டிஎஸ்பியை எப்போது ஹீரோவாக பார்க்க முடியும்?

இசையமைப்பாளராக இருப்பது மட்டுமே எனது இலக்காக இருந்தது. அதனால்தான் ஆரம்பத்தில் நடிப்பதற்கு வந்த சில வாய்ப்புகளை மறுத்தேன். கரோனா பெருந்தொற்று காலம் என் மனதை மாற்றிவிட்டது. அந்த காலம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. அதனால் மிக விரைவில் நடிகராக அறிமுகமாக இருக்கிறேன். அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:Mari Selvaraj : 'ராக்கி' டீமை வாழ்த்திய மாரி செல்வராஜ்!

ABOUT THE AUTHOR

...view details