பள்ளி மாணவன் நடிகர் ஜெயம் ரவி தனது காதலி சம்யுக்தா ஹெக்டேவிடம் காதலை வெளிப்படுத்த ஒரு இடத்தில் காத்திருக்கிறார். அப்போது லோக்கல் ரவுடிகளால் வரும் பிரச்னையில் சிக்கும் காதல் ஜோடி அங்கிருந்து தப்பிச் செல்லும்போது லாரி மோதி விபத்துக்குள்ளாகிறார் ஜெயம் ரவி.
விபத்து காரணமாக 16 ஆண்டுகள் கோமாவில் இருக்கும் ஜெயம் ரவியை யோகி பாபுவின் குடும்பம் வீட்டை அடமானம் வைத்து ஜெயம் ரவிக்கு சிகிச்சை அளித்துவருகிறது. திடீரென ஒருநாள் ஜெயம் ரவிக்கு நினைவு திரும்புகிறது.
காதலி சம்யுக்தா ஹெக்டேவுடன் ஜெயம் ரவி நினைவு திரும்பினாலும் பள்ளி மாணவனாகவே அவரின் மனநிலை இருக்கிறது. இதனால் நவீன உலக மாற்றத்தில் வாழ முடியாமல் தவிக்கிறார். இந்நிலையில் சிகிச்சைக்காக அடமான வைத்த வீடு ஏலத்திற்கு வருகிறது. அந்த வீட்டை காப்பாற்ற ஜெயம் ரவி என்னவெல்லாம் செய்கிறார் என்பது மீதி கதை.
வித்தியசமான கதை, புதிய முயற்சி என்றால் அதில் ஒரு கை பார்ப்பவர் ஜெயம் ரவி. அதை இப்படத்தில் சிறப்பாக செய்துள்ளார். காஜல் அவ்வப்போது வந்து செல்கிறார். சம்யுக்தா ஹெக்டே பள்ளி மாணவியாக மிக அழகாக நேர்த்தியாக தன் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். கே.எஸ். ரவிக்குமார் அரசியல்வாதியாக மனதில் நிறைகிறார்.
காஜல் அகர்வால் - ஜெயம் ரவி ஸ்மார்ட்போன் தொடங்கி, சென்னை வெள்ளம், கூவத்தூர் பஞ்சாயத்து வரை உண்மைச் சம்பவங்களுடன் இணைத்து மனிதம் பேசியது அருமை. ஆனால் திரைக்கதை எங்கேயோ சென்று, சுற்றி வருகிறது. மொபைலுக்கு அடிமையாகாதே உண்மையான அன்புக்கு சல்யூட் அடி எனச் சொல்லவருகிறது.
பாடல்கள் ஹிப்ஹாப் ஆதி குறிப்பிடும்படியாக இல்லை. பின்னணி ஓகே. ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவில் சென்னை வெள்ளம், ஃபிளாஷ் பேக் காட்சிகள் அருமை.
லாஜிக்குகளை மறந்த 'கோமாளி' நல்ல எண்டர்டெய்ன்மென்ட்!