அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்த திரைப்படம் கோமாளி. இப்படம் 90களில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை ஞாபகப்படுத்தும் விதமாக வெளிவந்து ரசிகர்களைக் கவர்ந்தது. பணம், புகழ், பெயர் இருந்தாலும் மனிதத்தை பற்றி நகைச்சுவையாக மக்களின் மனதில் பதியும்படி செய்தது.
'ஸ்மார்ட் ஃபோனிலும், நகர வாழ்க்கையில் மூழ்கிக் கிடக்கும் போது நடக்கும் இடர்ப்பாடுகளை ஆணி அடித்தாற்போல்' கோமாளிப் படத்தில் கூறியிருந்தார், இயக்குநர்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி படமாகவும் அமைந்தது. இந்நிலையில், கோமாளி படத்தின் 50ஆவது நாள் சக்சஸ் மீட் இன்று சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் ஜெயம் ரவி, 'கோமாளி சரியான கால கட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள படம். தொலைபேசியும் , தொழில்நுட்பமும் இல்லாமல் இருந்தபோது பிறந்து, தற்போது அதை பயன்படுத்தவும் செய்கின்றனர் இன்றைய தலைமுறையினர். அவர்களுக்கு ஏற்ற படமாக கோமாளி இருந்துள்ளது. படம் வெற்றியடைந்தால்தான் மகிழ்ச்சியடைவேன் என்றில்லை. மகிழ்ச்சியுடன் படங்களில் வேலை செய்வதாலேயே எனது படங்கள் வெற்றி பெறுகின்றன.
இளம் இயக்குநர்களோடு பணி செய்யும்போது எனது இளமைப் பருவத்தை திரும்பிப் பார்க்கிறேன். ரசிகர்களை நம்பியே இருக்கிறேன். படங்களில் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு காரணம் இன்றைய பார்வையாளர்கள் தான். யோகிபாபுவிடம் சிறந்த நண்பராகிவிட்டேன். அவரை வைத்து புதிய படத்தை இயக்கலாம் என்று இருக்கிறேன். என்னிடம் ஈகோ பார்க்காமல் நடித்தது பெருமையாக இருக்கிறது.
தயாரிப்பாளர், ஐசரி கணேஷ் எனக்கு நிறைய கைக்கடிகாரங்களை பரிசளித்துள்ளார். வெளியில் தெரியாமலேயே நிறைய உதவிகளைச் செய்பவர், அவர் அருகே அமர்ந்திருந்தாலே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்' என்று கூறினார்.
இதையும் படிங்க: ‘கோபப்படாதீங்க... எல்லாம் உங்களுக்காகத்தான்’ - விஜய் ரசிகர்களுக்கு சமாதானம்!