தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நிலைமை சீரானவுடன் எங்கள் படத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - பி.ஜி. முத்தையா

தற்போதைய நிலைமை சீராகி இயல்பு நிலைக்குத் திரும்பும்போது இந்த வாரம் வெளியாகாமல் நின்றுபோன படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிடச் செய்ய வேண்டும் என முத்தையா தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

cocktail
cocktail

By

Published : Mar 17, 2020, 9:07 AM IST

யோகி பாபு நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆர்.ஏ. விஜய முருகன் இயக்கும் புதிய படம் 'காக்டெய்ல்'. பிஜி மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, நாய்க்கு முடிவெட்டும் கடை நடத்தும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் இம்மாதம் 20 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக தமிழ்நாடு முழுவதும் திரையரங்கள் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து படத்தின் தயாரிப்பாளர் முத்தையா தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தற்போது உலகத்தையே அச்சுறுத்திவருகிறது பெருந்தொற்றான கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதால் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

தமிழ்நாடு அரசு மக்கள் அதிகம் கூடும் எல்லா இடங்களையும் பாதுகாப்பு நடவடிக்கையாக மூடச்சொல்லி உத்தரவிட்டுள்ளது. அதில் திரையரங்குகளும் அடங்கும். 'காக்டெய்ல்' படக்குழு மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. எங்கள் 'காக்டெய்ல்' படம் வருகிற 20-ஆம் தேதி திரைக்கு வரவிருந்தது.

தற்போது திரையரங்குகள் மூடப்படுவதால் எங்கள் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பட வெளியீட்டை நோக்கி விளம்பரம் திரையரங்குகளுக்கான முதலீடுகள் என நிறைய பணம் செலவுசெய்துள்ளோம்.

இந்தச் சூழ்நிலையில் படம் வெளியாக முடியாததால் அதிக இழப்பைச் சந்திக்க நேர்ந்துள்ளது. நாடே பேரிடர் நோக்கி நிற்பதால் நாங்கள் இழப்பை கணக்கில் கொள்வது முறையல்ல.

ஆனால் அதற்கு ஈடாக நிலைமை சீராகி மீண்டும் திரையரங்குகளில் இயல்புநிலை திரும்பும்போது இந்த வாரம் வெளியாகாமல் நின்றுபோன படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிடச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

அந்தச் சமயத்தில் பெரிய படங்களோ, கூடுதல் படங்களோ வெளியாகிவிடாமல் ஒழுங்குபடுத்தித் தருவதோடு எங்கள் படங்களுக்குத் தேவையான நல்ல திரையங்குகளை ஒதுக்கித் தர வேண்டும்.

அதுவே எங்களது இழப்பைச் சரிசெய்ய நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ்நாடு அரசும் இதைக் கருத்தில்கொண்டு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details