புகைப்படம் எடுப்பதை பொழுதுபோக்காகக் கொண்டிருந்த ஜீவா, பின் அதையே தனது வாழ்க்கையாக மற்றிக்கொண்டு சினிமாத் துறையில் ஒளிப்பதிவாளராக நுழைந்தார். புகழ் பெற்ற ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கியவர் தொடக்கத்தில் மலையாள திரைப்படங்களில் இயக்குநர் பிரியதர்ஷன் படங்களில் பணியாற்றினார். இதன்பின்னர் தமிழில் 'அக்னி நட்சத்திரம்', 'தேவர் மகன்', உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியற்றி இருந்தார்.
இந்த நிலையில், 1993ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநராக உருவெடுத்த ஷங்கர் அறிமுகமான 'ஜென்டில்மேன்' படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார் ஜீவா. அப்போது நடிகர் அர்ஜூனை கொள்ளைக்காரனாகவும், இறுதியில் ஜென்டில்மேனாக மாற்றியதில் ஜீவாவின் கேமரா பெரும்பங்கு வகித்தது. இந்தப் படம் பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஷங்கர் - ஜீவா காம்போவில் 'காதலன்', 'இந்தியன்' உள்ளிட்ட படங்கள் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
'இந்தியன்' படத்தில் அப்பா - மகன், சுதந்திர போராட்ட தியாகி, இந்தியன் தாத்தா என கமல் காட்டியிருக்கும் வேரியேஷனை திரையில் பிரதிபலித்தது ஜீவாவின் ஒளிவண்ணம்.
கமலுக்கு இப்படியென்றால் அஜித்தை வைத்து துறுதுறுப்பான இளைஞராக 'ஆசை' படத்திலும், காதல் மற்றும் வில்லத்தனம் கொண்ட இரு மாறுபட்ட அஜித்தை 'வாலி' படத்திலும் காட்டியிருப்பார்.
இதேபோல் 'குஷி', 'சச்சின்' என இரு வேறு மாறுபட்ட கதை களங்களில் விஜய்யை இளமை துடிப்புடன் புதுமையாக காண்பித்து, அவரது ரசிகர்களின் வட்டத்தை பெருக்கினார். ஒளிப்பதிவில் பல்வேறு விதமான வெரைட்டி காட்டிய ஜீவா, இயக்குநராக '12B' என்று படம் அவதாரம் எடுத்தார்.
சென்னையின் பிரபலமான பேருந்து வழித்தடத்தின் பெயரில் தலைப்பா? என்று அப்போது பலரும் யோசித்த தருணத்தில், இப்படத்தில் டாப் ஹீரோயின்களாக வலம் வந்த 'சிம்ரன்', 'ஜோதிகா'வை நடிக்க வைத்ததுடன், நடிகர் ஷாம்-ஐ ஹீரோவாக அறிமுகப்படுத்தி படத்தையும் புதுமையான கதை மூலம் பேச வைத்தார்
கல்லூரி வாழ்க்கையில் நண்பர்களுக்குள் நிகழும் பாசம், சண்டை, ஈகோ, காதல் போன்ற நிகழ்வுகளை கல்லூரி செல்லும் ஒவ்வொருவரும் தனக்குள் பொருத்தி கொள்ளும் விதமான கதையம்சத்துடன் 'உள்ளம் கேட்குமே' என தனது அடுத்த படத்தை உருவாக்கியிருந்தார். அந்தக் கதையில் வரும் இளைஞர்களின் ஏக்கங்கள், குணாதிசியங்கள் தனக்கும் பொருந்தக்கூடியவை என 90களில் பிறந்தவர்கள் கொண்டாடினார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்தப் படம் அப்போதைய '96'.
காதல் என்பது ஒரு முறைதான் பூக்க வேண்டுமா? ஊடல் என்பது ஊறுகாய் போல இருக்கவேண்டும். அதுவே சாப்பாடாகிவிடக்கூடாது என்பதை உதாரணப்படுத்தும் விதமாக வெளிவந்தது ஜீவாவின் மூன்றாவது படமான 'உன்னாலே உன்னாலே'. முக்கோண காதல் கதையாக செல்லும் இந்தப் படத்தின் இறுதியில் காதலனை பிரிந்த வலியை சதா வெளிப்படுத்தும் காட்சி ஒவ்வொரு காதலர்களாலும் கொண்டாடப்பட்டது.
அதுமட்டுமில்லாது நடிகர் 'ஷாம்', 'ஆர்யா', 'வினய்', 'அசின்' உள்ளிட்டோர்களை தமிழ் சினிமாவில் புதுமுகமாய் அறிமுகபடுத்தியவர். ஜீவாவின் ஒளிப்பதிவில் ஒரு ரிச்னஸ் (Richness) இருக்கும் கூடவே ரம்யமும் கலந்திருக்கும். இவரது படங்களின் படத்தை ஃபிரேம் பை ஃபிரேமாக ரசித்தவர்களுக்கு இது புரியும்.
ஹாரிஸ் ஜெயராஜை ஆஸ்தான இசையமைப்பாளராக தனது படங்களுக்கு பயன்படுத்தும் இவர், பல சிறந்த பாடல்களை கொடுத்ததுடன் அதன் காட்சியமைப்பிலும் அழகியலை கூட்டியிருப்பார். ஜீவாவின் மனைவி அனீஷா, அவரது படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியுள்ளார்.