தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சினிமாவின் அதிதீவிர காதலன்... சீயான் விக்ரம் பிறந்த நாள் இன்று...!

தமிழ் சினிமாவில் போராடி வெற்றி பெற்று, ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களுக்கு புதிய சினிமா அனுபவத்தை கொடுப்பதற்காக கடுமையாக உழைக்கும் மகாக் கலைஞன் நடிகர் சீயான் விக்ரமனின் 53ஆவது பிறந்தநாள் இன்று.. விக்ரமின் போராட்ட வாழ்வும், சினிமா மீது அவருக்கு இருக்கும் வெறித்தனமான காதலும் குறித்த சிறு பதிவு...

விக்ரம் பிறந்தநாள்

By

Published : Apr 17, 2019, 2:24 PM IST

Updated : Apr 17, 2019, 3:22 PM IST

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வெளியாகி வெற்றி விழா கொண்டாடி இருக்கின்றன. ஆனால், ஒரு சில படங்கள் மட்டுமே, தமிழ் சினிமாவின் தரத்தை இந்த உலகிற்கும், கலைஞர்களுக்கு காலம் கடந்த அங்கீகாரத்தையும் கொடுக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு படம்தான் சேது. கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தின் மூலம், இரண்டு மகத்தான கலைஞர்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்தனர். ஒருவர் படத்தின் இயக்குநர் பாலா. மற்றொருவர் நடிகர் 'சீயான்' விக்ரம். சிவாஜி, கமலுக்கு பிறகு நடிப்புக்கென்று ஒருவர் கிடைத்து விட்டார் என்று விக்ரமை சினிமா ரசிகர்கள் கொண்டாடினர். சினிமா அங்கீகாரம், முகமறியா ரசிகர்களின் அன்பு, மீடியா வெளிச்சம் என இந்த அற்புதங்கள் எல்லாம் ஒரே நாளில் நடிகர் விக்ரமுக்கு நடந்துவிட்டதா என்றால்.. இல்லை என்றுதான் கூற வேண்டும். அதற்கு விடாமுயற்சி, தோல்வி, காத்திருப்பு, வலி மற்றும் ஹீரோவாக அறிமுகமாகி 10 ஆண்டுகள் போராட்டம் ஆகியவற்றை விலையாகக் கொடுக்க வேண்டியிருந்தது.

சேது இடைவேளை காட்சி

கடந்த 1990ஆம் ஆண்டு டி.எல். ஜோய் இயக்கிய 'என் காதல் கண்மணி' படத்தில் முதல் முறையாக ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விக்ரம். அடுத்து ஸ்ரீதரின் 'தந்துவிட்டேன் என்னை', ரஜினி, ஏவிஎம்மின் ஆஸ்தான இயக்குநர் எஸ்.பி முத்துராமன் இயக்கிய 'காவல் கீதம்', ஒளி ஓவியர் பி.சி. ஸ்ரீராமின் 'மீரா' என அடுத்தடுத்து பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்தாலும், எந்த படங்களும் பெரிய வெற்றியை பெறவில்லை. தோல்வி நாயகன் என்ற பெயரை மட்டுமே பெற்றுக் கொடுத்தன. எப்படி ரஜினி, கமலுக்கு ஒரு பாலச்சந்தர் தேவைப்பட்டாரோ, அதேபோல் விக்ரமுக்கு பாலா தேவைப்பட்டிருக்கிறார்.

ஆரம்ப காலப் படங்கள் தோல்வி அடைந்ததால், தொடர்ந்து ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று விக்ரம் அடம்பிடிக்கவில்லை. வீட்டுக்குள் முடங்கவுமில்லை. தனக்கு பிடித்த சினிமாவில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்றே விக்ரம் விரும்பினார். டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும், குணச்சித்திர நடிகராகவும், தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் பணிபுரிந்தார். 90-களின் காலக்கட்டத்தில் இளம் நடிகர்கள் பலருக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். முக்கியமாக தல அஜித்திற்கு அமராவதி படத்திலும், நடிகர் வினீத்திற்கு புதிய யுகம் படத்திலும், காதலன் படத்தில் பிரபு தேவாவிற்கும், காதல் தேசம் படத்தில் அப்பாஸிற்கும், சத்யா படத்தில் ஜே.டி. சக்ரவர்த்திக்கும் குரல் கொடுத்துள்ளார். மேலும், தூர்தர்ஷன் டிவிக்காக கலாட்டா குடும்பம், சிறகுகள் போன்ற நாடகங்களில் நடித்தார் விக்ரம்.

பாலா-விக்ரம்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மூன்று தோல்வி படங்கள் கொடுத்துவிட்டு, 'மீண்டும் வாய்ப்பு தாருங்கள்..!' என தயாரிப்பு கம்பெனிகளின் கதவுகளை அவ்வளவு எளிதில் தட்டிவிட முடியாது. ஏளனம், கிண்டல், சக கலைஞர்களின் துரோகம், குடும்பத்தின் நெருக்கடி என்று பல்வேறு விஷயங்களை தாண்டித்தான் ஒரு ஹீரோ, வெற்றியைப் பறிக்க முடியும். அப்படித்தான் சேது படத்தின் வெற்றி மூலம், பல்லாண்டு தோல்வி மூலம் பெற்ற ரணத்தை ஆற்றிக்கொண்டார் விக்ரம். இந்த வெற்றியின் மூலம் அடுத்தடுத்து படங்களில் புக்காகி கோடிகளை குவித்திருக்க முடியும். ஆனால், அந்த பாதையைத் தேர்ந்தெடுக்காமல், தனக்கும் தமிழ் சினிமாவிற்கும் நல்லதொரு பெயரை வாங்கிக் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார் விக்ரம்.

காசி எனும் படத்தில் பார்வையற்ற இளைஞனாக வாழ்ந்திருந்தார் விக்ரம். அப்படத்தில் நடிக்கும்போது கண்ணில் பார்வை குறைபாடு ஏற்பட்டும், அந்த கேரக்டருக்கு நியாயம் செய்ய வேண்டும் என்று அதிசிரத்தையுடன் நடித்து முடித்தார். அந்த உண்மைக்கும், உழைப்பிற்கும் மாநில அரசு, சிறந்த நடிகர் விருதை கொடுத்து விக்ரமை கவுரவப்படுத்தியது. அடுத்து தனது நண்பரும், இயக்குநருமான தரணி இயக்கத்தில், தில், தூள் மற்றும் அஜித்தின் ஆஸ்தான இயக்குநரான சரண் உடன் ஜெமினி போன்ற பக்கா கமர்ஷியல் படங்களில் நடித்து தான் எந்த கிரவுண்டிலும் கில்லி என நிரூபித்தார். இந்த படங்கள் அவரை அனைத்து சென்டர் ஆடியன்ஸ்களிடமும் கொண்டு சென்றன. அடுத்து 2003ஆம் ஆண்டில் ஹரி இயக்கத்தில் வெளியான சாமி படத்தில், அதிரடியான போலீஸ் கேரக்டரில் நடித்து பக்காவான கமர்ஷியல் ஹீரோவாக மாறியிருந்தார்.

பிதாமகன்

அதே நேரத்தில் சாமுராய், காதல் சடுகுடு, கிங் போன்ற கதையை மையமாக வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட படங்களில் நடித்து, தன்னுள் இருக்கும் சினிமா ரசிகனுக்கும் தீனி போட்டுக் கொண்டார் விக்ரம். பின்னர் தனக்கு சினிமாவில் வாழ்வு கொடுத்த பாலா உடன் மீண்டும் பிதாமகன் படத்தில் இணைந்தார். பிணத்துடன் வாழ்க்கை நடத்தும் வெட்டியான் கேரக்டரில் நடித்து நடிப்பின் உச்சம் தொட்டார் விக்ரம். சூர்யா உடனான கரடு முரடான நட்பும், சங்கீதா உடனான மெல்லிய காதலையும் எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று தெரியாமல் கறை படிந்த பல்லைக் காட்டும் நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றது. விக்ரமை வேறொரு பரிணாமத்திலும் காட்டியது. அப்படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார் விக்ரம். அடுத்து மீண்டும் ஹரியுடன் அருள், ஷங்கருடன் அந்நியன், லிங்குசாமி உடன் பீமா, சுசி கணேசனுடன் கந்தசாமி, மணிரத்னம் உடன் ராவணன் போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்தார் விக்ரம். இந்த படங்கள் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு நல்ல வசூலைத் தந்ததே தவிர, விக்ரமின் அதி தீவிர ரசிகனுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தன.

இந்நிலையில் ஏ.எல்.விஜய் உடன் தெய்வத் திருமகள் படத்தில் குழந்தை மனம் படைத்த தந்தையாக நடித்தார். சிறுமி சாரா உடன் விக்ரம் நடித்த காட்சிகள் ஒவ்வொன்றும் கவிதையாக மனதை வருடின. முக்கியமான அந்த நீதிமன்றக் காட்சியில் அப்பாவுக்கும் மகளுக்கும் இடையே வசனம் இல்லாமல் சைகை மொழியில் பேசிக்கொள்ளும் போது கண்ணீரை துடைத்தபடி கைக்குட்டையை நனைத்து கொண்டார்கள் ரசிகர்கள். அந்த திரைப்படத்தின் ’ஆரிரோ ஆராரிரோ’ பாடலில் கவிஞர் நா.முத்துக்குமார் எழுதியிருப்பார், “வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே” என்று. அவரது வரிகளுக்கு நியாயம் செய்யும் விதமாக படம் முழுவதும் குழந்தையாய் அனைவர் மனதிலும் தவழ்ந்திருப்பார் விக்ரம். இதுதான் உங்களிடம் இருந்து வேண்டும் சீயான் என்று அப்படத்தை வசூல் ரீதியாகவும் வெற்றி பெறச் செய்தனர் ரசிகர்கள்.

அடுத்து வெளியான ராஜபாட்டை, தாண்டவம், டேவிட் போன்ற படங்கள், கணக்குகளில் மட்டுமே சேர்ந்து கொண்டன. மீண்டும் ஐ எனும் படத்தின் மூலம் ஷங்கருடன் கூட்டணி சேர்ந்த விக்ரம், புதுமையான நோயினால் பாதிக்கப்பட்டு காதலியிடம் இருந்து விலகி நிற்கும் இளைஞன், உடம்பை முறுக்கேற்றி பாடி பில்டிங்கில் இருந்து மாடலிங் துறைக்கு வரும் இளைஞன் என இரண்டு கெட்டப்புகளில் முழு அர்ப்பணிப்பையும் கொட்டி நடித்திருப்பார் விக்ரம். இப்படத்தில் அவரின் உழைப்பும், பி.சி ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் பெரிதும் பேசப்பட்டன. பின்னர் பத்து எண்றதுக்குள்ள, இருமுகன், சாமி ஸ்கொயர், ஸ்கெட்ச் போன்ற படங்களில் நடித்தார் விக்ரம். இதில், இருமுகன், ஸ்கெட்ச் மட்டுமே வசூல் ஈட்டின. தற்போது கவுதம் வாசுதேவ் மேனன் உடன் துருவ நட்சத்திரம், கமல் தயாரிக்கும் கடாரம் கொண்டான், தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் மகாவீர் கர்ணா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

கமர்ஷியல் படமோ, கலைப்படமோ எதுவாக இருந்தாலும் விக்ரம் கொடுக்கும் உழைப்பு ஒன்றுதான். தன்னையும், உடலையும் வருத்திக்கொண்டு ஒவ்வொரு கேரக்டரும் கேட்கும் தேவைகளை நூறு சதவீதம் கொடுத்திட வேண்டும் என்று நினைக்கும் மகா கலைஞன் விக்ரம். யாருடா இவன்... என்ன நடிப்புடா... ஏன் தமிழ் சினிமா இத்தனை காலம் அங்கீகரிக்கவில்லை... என்பதே சேது படம் பார்த்து வெளிவந்த ஒவ்வொரு ரசிகனின் முதல் கேள்வியாக இருந்தது. அந்த கேள்வி இப்போதும் இருக்கிறது விக்ரம். உங்களிடம் பஞ்ச் வசனங்களையோ, ஒரே நேரத்தில் நூறு பேரை அடித்து நொறுக்கும் அதிரடி நாயகனையோ எதிர்பார்க்கவில்லை. உங்களிடம் எதிர்பார்ப்பது நடிப்பு... நடிப்பு... நடிப்பு மட்டுமே... சேது, பிதாமகன், காதல் சடுகுடு, தெய்வத் திருமகள் போன்ற படங்களில் விக்ரமாக தெரிந்த நீங்கள், பிற படங்களில் வழக்கமான தமிழ் சினிமா நாயகர்களையே நினைவுப்படுத்தினீர்கள் விக்ரம். வரணும் மீண்டும் பழைய சேதுவாக வரணும்... இதுவே பாமர ரசிகனின் வேண்டுகோள்.

விக்ரம் குறித்து இயக்குநர் பாலா கூறிய வார்த்தைகள் இவை “பல சிக்கல்களுக்கு பிறகு சேது படம் ஆரம்பித்தோம். ஆனாலும் மீண்டும் அந்த படம் பிரச்னையால் பாதியில் நின்றுவிட்டது. அப்போது விக்ரமுக்கு விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அவரும் போய் நடித்துவிட்டு அதில் கிடைத்த பணத்தில் பாதியை என்னிடம் கொடுத்தார். அப்போது எனக்கு பணத் தேவை இருந்தது. ஆனாலும் விக்ரமிடம் அதை கூறவில்லை. இருந்தாலும் அந்த சமயத்தில் அவர் கொடுத்த பணம் எனக்கு உதவியது. எனது தேவையை நான் கூறாமலே புரிந்துகொண்ட ஒரு ஆத்மா நண்பன் விக்ரம்”.

ஆம், பாலாவுக்கு மட்டுமில்லை... ரசிகர்களின் தேவை எதுவென்பதை ரசிகர்கள் கேட்காமலேயே அவர்களுக்கு கொடுத்த, கொடுத்து கொண்டிருக்கும் நடிகன் விக்ரமுக்கு ஹேப்பி பர்த்டே..!

Last Updated : Apr 17, 2019, 3:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details