மே 12 அன்னையர் தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற பெற்றோர்களை காக்கும் நோக்கில் 'தாய்' அமைப்பை ராகவா லாரன்ஸ் தொடங்கியுள்ளார். இதன் அறிவிப்பு மற்றும் தாயின் அன்பை எடுத்துச்சொல்லும் பாடல் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ், அவரின் தாயார் கண்மணி மற்றும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் கலந்து கொண்டனர். இந்த அமைப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள உணர்வுப்பூர்வமான பாடல் குறுந்தகட்டை லாரன்ஸ் வெளியிட, பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் பெற்றுக் கொண்டனர்.
'பெற்றோர்களை ஆசிரமத்தில் சேர்ப்பது கொலைக்கு சமமானது..!' - ராகவா லாரன்ஸ் - தாய்' அமைப்பு
சென்னை: "செல்போனுக்கு கொடுக்கும் மரியாதை கூட பெற்றோர்களுக்கு இன்றைய தலைமுறையினர் கொடுப்பதில்லை. பெற்றோர்களை ஆசிரமத்தில் சேர்ப்பது கொலைக்கு நிகரான குற்றம்" என்று, நடிகர் ராகவா லாரன்ஸ் வேதனையுடன் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகவா லாரன்ஸ், "இந்த ஆல்பத்தின் நோக்கமே, தாய் தந்தையரை யாரும் ஆசிரமத்திற்குள் விடக்கூடாது என்பதுதான். இன்றைய தலைமுறையினர் செல்போனுக்கு கொடுக்கும் மரியாதையை, தங்களது பெற்றோருக்கு கொடுப்பதில்லை. ஒரு சிலர், தங்களது தாய் தந்தையரை ஆசிரமத்தில் விட்டுவிட்டு சரியான நேரத்தில் பணம் அனுப்புகிறேன் என்று கூறுகின்றனர். இதையெல்லாம் தடுக்கும் வகையில்தான் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்.
இந்த உலகில் எல்லா ஆசீர்வாதங்களையும் விட தாயின் ஆசீர்வாதம் மிகப்பெரியது. அதை பிள்ளைகள் புரிந்து கொள்ளாமல் அப்பா அம்மாவை ஆசிரமத்தில் விடுவது ஒரு தவறான செயல். 'தாய்' அமைப்பு மூலமாக முதியோர்களுக்கு பல நல்ல விஷயங்கள் நடத்த திட்டமிட்டுள்ளேன். தனது ரத்தத்தை பாலாக்கி ஊட்டி வளர்த்த பெற்றோர்களை ஆசிரமத்தில் சேர்ப்பது கொலைக்கு நிகரான குற்றம்", என்றார்.