இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் 9ஆம் தேதி வெளியான படம் தர்பார். படம் வெளியான ஒரு வாரத்தில் 150 கோடி வசூலானதாகக் கூறப்பட்டது. இதையடுத்து 'தர்பார்' படம் வெளியான இரண்டு, மூன்று வாரத்திற்குப் பிறகு 'தர்பார்' திரைப்படத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக 25 அடையாளம் தெரியாத விநியோகஸ்தர்கள் ஏ.ஆர்.முருகதாஸ் வீடு மற்றும் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, தன்னுடைய வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் காவல்துறை பாதுகாப்பு கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகதாஸ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நீதிமன்றத்தில், ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மேற்கொண்டு தனக்கு எந்த மிரட்டல்களும் வராது என விநியோகஸ்தர்கள் சங்கத்தில் இருந்து இயக்குநர்கள் சங்கத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால், காவல்துறையிடம் கொடுத்தப் புகார் மீது, மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள அவசியம் இல்லை எனத் தெரிவித்தார்.
இதற்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதி, 'விநியோகஸ்தர்கள் மிரட்டியதாகக் கூறி, பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்வது பின்னர், சமாதானம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி, காவல்துறையில் கொடுத்தப் புகாரை திரும்ப பெற்றுக்கொண்டு வழக்கை முடிக்க வேண்டும் என தெரிவிப்பது கண்டனத்துக்குரியது' எனத் தெரிவித்தார். மேலும், 'நீங்கள் நினைத்தபடி சென்னை உயர் நீதிமன்றம் செயல்பட வேண்டும் என நினைக்கிறீர்களா?' எனவும் ஏ.ஆர்.முருகதாஸுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க:‘நான் மிகவும் சென்ஸிட்டிவானவன்’ - மனம் திறந்த மகேஷ் பாபு