வாலி படத்தில் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே. சூர்யா கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார். 'இறைவி' படத்தில் குணச்சித்திர நடிப்பையும் 'ஸ்பைடர்', 'மெர்சல்' ஆகிய படங்களில் வில்லனாகவும் நடித்திருந்த எஸ்.ஜே. சூர்யா மக்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்துள்ளார்.
இதற்கிடையே நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'மான்ஸ்டர்' படத்தில், எஸ்.ஜே. சூர்யா முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவைமிக்க நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இந்தப் படம் அனைத்துவிதமான ரசிகர்களாலும் அங்கீகரிக்கப்பட்டது.
இந்நிலையில், 'மான்ஸ்டர்' வெற்றியைத் தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே. சூர்யா, பிரபல இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏஞ்சல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு 'பொம்மை' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் சிகரம் பாலசந்தர் இயக்கத்திலும் 'பொம்மை' என்ற பெயரில் த்ரில்லர் படம் உருவாக்கப்பட்டது.