விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் நடிகர் விஷால் நடித்துவரும் திரைப்படம் 'சக்ரா'. இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் இயக்கும் இந்தப் படம் ஆன்லைன் வர்த்தக மோசடிகளை பின்னணியாகக்கொண்டு சைபர் ஹேக்கர்கள் குறித்த கதையாக உருவாகிவருகிறது.
இந்தத் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல் துறை அலுவலராக நடிக்கிறார். ரெஜினா கசாண்ட்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட என நான்கு மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லரை தென்னிந்திய பிரபல நடிகர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வரும் சனிக்கிழமையன்று வெளியிடுகிறார்கள்.
தமிழில் கார்த்தி, ஆர்யா, தெலுங்கில் ராணா, மலையாளத்தில் மோகன்லால், கன்னடத்தில் யஷ் என ஐந்து நடிகர்கள் வெளியிடுகிறார்கள். சமூக வலைதளங்களில் 'சக்ரா'வின் க்ளிம்ப்ஸ் டீசரை பார்த்த லட்சக்கணக்கான ரசிகர்கள் அது 'இரும்புத்திரை' படம்போல் இருக்குமா எனவும் 'இரும்புத்திரை' படத்தின் இரண்டாம் பாகமா என்றும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.