தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தல் சென்னை மயிலாப்பூரில் புனித எப்பாஸ் பள்ளியில் ஏழு மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தத் தேர்தல் 2019-2022ஆம் ஆண்டிற்கான தேர்தல் தற்போது நடைபெறுகிறது. மொத்த உறுப்பினர்களான மூவாயிரத்து 644 பேரில், மூவாயிரத்து 171 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவிழாக் கூட்டம்போல் நடைபெற்றுவரும் இந்தத் தேர்தலில் பாண்டவர் அணியும் -சுவாமி சங்கரதாஸ் அணியும் எதிர் எதிர் முனையில் போட்டியிடுகின்றன.
தேர்தல் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில் நடிகர் ஆர்யா சைக்கிளில் வந்து வாக்களித்தார். அவர் சைக்கிளில் வந்து வாக்களித்தது சக நடிகர் நடிகைகளை வியக்கவைத்தது. இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 'அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருந்தோம். தவறான புரிதலால் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டது வேடிக்கையாக இருக்கிறது' என்று தெரிவித்தார்.
இவரைத் தொடர்ந்து நடிகை கோவை சரளா வாக்களித்தார். பாண்டவர் அணியை ஆதரித்து பேசிய அவர், 'பாண்டவர் அணி வெற்றிபெறுவது உறுதி, அஞ்சல் வாக்குகள் கிடைப்பதில் தாமதமானதற்கு நாங்கள் காரணமில்லை' என்று அவர் தெரிவித்தார்.
தேர்தல் நடைபெறும் இடத்தில் இரண்டு துணை ஆணையர்கள் தலைமையில் 400 காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.