சின்னத்திரை நடிகை சித்ரா இன்று அதிகாலை (டிசம்பர் 9) சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 28 வயதான அவருக்கு ஜனவரி மாதம் முறைப்படி திருமணம் நடைபெறவிருந்தது. இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களிடையும் சின்னத்திரையினரிடையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், "எனக்கு சித்ராவை தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால் அவரது வலியை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அவர் இந்த தவறான முடிவை எடுக்கும் முன்பு யாரையாவது தொடர்பு கொண்டிருக்கவேண்டும். ஆற்றல் நிறைந்த வாழ்க்கை தற்போது விரைவில் பறிக்கப்பட்டுள்ளது. இறுதியாக நீங்க தேடியதை கண்டுபிடித்தீர்கள் என நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
அதே போல் நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில், "மறுபடியும் நாம் இதை பற்றி பேச ஆரம்பித்துள்ளோம். நம் வாழ்க்கை மிகவும் விலைமதிப்பற்றது. தனது வாழ்க்கையை அவர் முடிவுக்கு கொண்டுவருவதற்கு முன்பு தனக்கு பிடித்தவரிடம் பேசிருக்கவேண்டும் என விரும்புகிறேன். இதுமாதிரி எண்ணம் தோன்றும் போது யாரிடமாவது பேசுங்கள் நிச்சயம் நமக்கு உதவி கிடைக்கும். வாழ்வை மாற்ற ஒரு வினாடி போதும்" என பதிவிட்டுள்ளார்.
அதே போல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "சித்ராவின் மரணம் அதிர்ச்சியையும், ஆழ்ந்த வருத்தத்தையும் தருகிறது. நம்பிக்கைக்குரிய திறமையான கலைஞர் விரைவில் சென்று விட்டார். தற்கொலை என்பது பிரச்னைகளுக்கு ஒரு தீர்வல்ல என்பதை மக்கள் உணர வேண்டும். இந்த உண்மையை, சமூகம் முன்பை விட வலுவாக வலியுறுத்த வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
இவரைத்தொடர்ந்து சின்னத்திரை தொகுப்பாளினி அஞ்சனா தனது ட்விட்டர் பக்கத்தில், "வலிமை, மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை வாழுங்கள். உயிர், வாழ்க்கையை விட யாரையும் அல்லது எதையும் விலைமதிப்பற்றதாக மாற்ற வேண்டாம். தயவு செய்து வெளிப்படையாகப் பேசுங்கள். உயிரை மாய்த்துக் கொள்ளவேண்டாம் சித்ராவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என பதிவிட்டுள்ளார்.