கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா, டிவி தொடர், படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாக ஓய்வின்றி சுற்றித் திரிந்த பிரபலங்கள், 144 தடையால் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வீட்டில் இருக்கும் பிரபலங்களும் தங்களது சமூக வலைதளங்களில், கரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், குறும்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. ’ஃபேமிலி’ என்று பெயரிடப்பட்டுள்ள இக்குறும்படத்தைப் பிரசூன் பாண்டே இயக்கியுள்ளார்.
அதில், பிரபல நடிகர்கள், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ரன்பீர் கபூர், நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்குறும்படத்தில் ஊரடங்கு காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, உடல் நலனைப் பேணுவது, அவசியம் இல்லாமல் வெளியே வருவது, சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிவது, நோய் அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தி கொள்வது உள்பட கரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வு போன்ற விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க:கரோனா தடுப்புக்கு ரூ 1.25 கோடி வழங்கிய 'தல' அஜித்