இயக்குநர் விஜய் ஸ்ரீஜி தனது முதல் படமான 'தாதா 87'- இல் உலகநாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசனை ஒரு டானாக அறிமுகப்படுத்தி மக்கள் மனங்களை வென்றார். இப்படத்தை தொடர்ந்து 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' (பப்ஜி) என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இவர் தற்போது 'பவுடர்' என்ற தனது மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை வித்யா பிரதீப் கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் மனோபாலா, வையாபுரி, ஆதவன், அகல்யா வெங்கடேசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தில் காவல்துறை அலுவலராக ராகவன் என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், சினிமா மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அறிமுகமாகிறார். ராஜா பாண்டி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு லீயாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார். ஜி மீடியா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதற்கட்டபடப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், விரைவில் இப்படம் வெளியாகும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இப்படத்தின் டீசரை விக்னேஷ் சிவன், சசிகுமார், போனி கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிட்டனர். இப்படத்தின் டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இதுவரை இந்த டீசரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். தற்போது இந்த படத்தின் டீசரை பார்த்து இயக்குநர் இமயம் பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், நடிகர் மோகன் உள்ளிட்டோர் நிகில் முருகன் உள்ளிட்ட படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளனர்.